அறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து

943
SL v ENG

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அறிமுக வீரர் பென் போக்ஸின் சிறந்த துடுப்பாட்டத்தினால் நல்ல நிலையில் காணப்படுகின்றது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தமது சுற்றுப் பயணத்தின் முதற்கட்ட வேலைகளாக அமைந்த ஒரு நாள் தொடர், T20 தொடர் என்பவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட முன்னதாக ஏற்படாகியிருந்தது.

இலங்கை அணியிலிருந்து விலக்கப்பட்ட லஹிரு குமார

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லஹிரு…

அந்தவகையில் இலங்கை – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று (6) ஆரம்பமானது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் வீரரான ரங்கன ஹேரத்தின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்த இந்த டெஸ்ட்டின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் தனது தரப்பிற்காக முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதன்படி, இங்கிலாந்து அணி துடுப்பாட்ட வீரர்களான ரோரி பேர்ன்ஸ் மற்றும் பென் போக்ஸ் ஆகியோரினை இன்று டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்தது.

மறுமுனையில் கடைசியாக தமது சொந்த மண்ணில் வைத்து தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரினை சுழல் வீரர்களின் ஆதிக்கத்தோடு கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி, ஹேரத்திற்கு மேலதிகமாக இரண்டு சுழல் வீரர்களுடன் ஆட்டத்தின் களத்தடுப்பில் ஈடுபட தயராகியது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, கெளசால் சில்வா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, தில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, சுரங்க லக்மால், ரங்கன ஹேரத்

இங்கிலாந்து அணி  

கீட்டோன் ஜென்னிங்ஸ், ரோரி பென்ஸ், மொயின் அலி, ஜோ ரூட் (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பென் போக்ஸ், சேம் குர்ரன், ஆதில் ரஷீத், ஜேக் லீச், ஜேம்ஸ் அன்டர்சன்

தொடர்ந்து இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அறிமுக வீரர் ரோரி பேர்ன்ஸ், கீட்டோன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களம் வந்தனர். எனினும், இங்கிலாந்து அணிக்காக இன்று அறிமுகமாகிய பேர்ன்ஸ் சுரங்க லக்மால் வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரில் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பேர்ன்ஸை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த மொயின் அலியும் ஓட்டங்களேதுமின்றி அரங்கு நடந்தார். இதனால், இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே ஒரு சரிவினை சந்தித்தது.

இப்படியானதொரு நிலையில் களத்தில் நின்ற ஆரம்ப வீரர் கீட்டோன் ஜென்னிங்ஸ் மற்றும் புதிதாக களம் நுழைந்த இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் ஆகியோர் தமது தரப்பிற்கென இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போடத் தொடங்கினர். இரு வீரர்களும் இங்கிலாந்து அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக 62 ஓட்டங்கள் பகிர்ந்த நிலையில் ரங்கன ஹேரத் ஜோ ரூட்டினை போல்ட் செய்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சொத்து விபரங்களை வெளியிடுவதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட்..

இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள ரங்கன ஹேரத் காலி மைதானத்தில் கைப்பற்றிய 100ஆவது டெஸ்ட் விக்கெட்டாக மாறிய ஜோ ரூட் 46 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ரூட்டின் ஜோடியாக இருந்த கீட்டோன் ஜென்னிங்ஸின் விக்கெட்டும் 46 ஓட்டங்களுடன் பறிபோனது. ஜென்னிங்ஸை அடுத்து களம் வந்த பென் ஸ்டோக்ஸ் வெறும் 7 ஓட்டங்களுடன் வெளியேற ஒரு கட்டத்தில் 103 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து முதல் நாள் மதிய போசனத்தினை இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் அடைந்தனர்.

மதிய போசனத்தை அடுத்து களத்தில் புதிய வீரர்களாக இருந்த ஜோஸ் பட்லர் – அறிமுக வீரர் பென் போக்ஸ் ஜோடி நிதானமான முறையில் ஆடி பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றை (61) ஆறாம் விக்கெட்டுக்காக எடுத்தது. பின்னர் இங்கிலாந்து அணியின் ஆறாவது விக்கெட்டாக ஜோஸ் பட்லர் முதல் நாள் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் தில்ருவான் பெரேராவின் சுழலில் ஆட்டமிழந்து 38 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தேநீர் இடைவெளியினை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்காக போட்டியின் முதல் நாளில் அவ்வணி துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்ற முதல் அரைச்சதத்தினை அறிமுக வீரரான பென் போக்ஸ் பதிவு செய்தார். போக்ஸுடன் புதிதாக மைதானத்திற்குள் வந்த 20 வயதேயான சேம் குர்ரனும் துடுப்பாட்டத்தில் ஜொலிக்க இங்கிலாந்து அணி 250 ஓட்டங்களை எட்டியது.

ஒரு கட்டத்தில் சரிவிலிருந்த இங்கிலாந்து அணியை வலுவான நிலை ஒன்றுக்கு கொண்டு செல்ல காரணமாக இருந்த சேம் குர்ரன், துரதிஷ்டவசமாக 48 ஓட்டங்களுடன் அரைச்சதம் ஒன்றினை  கடக்க தவறி ஆட்டமிழந்தார்.

சேம் குர்ரனை அடுத்து பின்வரிசையில் ஆடும் ஆதில் ரஷீத் பென் போக்ஸ் உடன் சேர்ந்து இங்கிலாந்து தரப்பினை மேலும் வலுப்படுத்தினார். இரண்டு வீரர்களும் இங்கிலாந்து அணியின் எட்டாம் விக்கெட்டுக்காக பகிர்ந்த அரைச்சத இணைப்பாட்டத்துடன் (54) இங்கிலாந்து அணி போட்டியின் முதல் நாள் நிறைவில் 321 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

களத்தில் பென் போக்ஸ் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருப்பதுடன், போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணியின் இறுதி விக்கெட்டாக பறிபோன ஆதில் ரஷீத் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களை குவித்திருந்தார்.

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரரான தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<