இறுதி நிமிட கோலால் அடுத்த சுற்றுக்கு நுழைந்த ஆர்ஜன்டீனா

249

மார்கோஸ் ரோஜோ (Marcos ROJO) கடைசி நேரத்தில் போட்ட கோல் மூலம் நைஜீரியாவுக்கு எதிரான வாழ்வா சாவா என்ற போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆர்ஜன்டீன அணி உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நொக் அவுட் சுற்றுக்கு தெரிவானது.

அடுத்த சுற்றுக்குத் தெரிவாக இந்த போட்டியை சமநிலை செய்தால் போதும் என்ற நிலையில் களமிறங்கிய நைஜீரிய அணி அதிர்ச்சியுடன் வெளியேற வேண்டி ஏற்பட்டது.

இதேவேளை, குரோஷியாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஐஸ்லாந்து முதல் முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்து வெளியேறியது.

ஆர்ஜன்டீனா எதிர் நைஜீரியா

Getty Images

D குழுவில் மொத்தம் 4 புள்ளிகளைப் பெற்ற ஆர்ஜன்டீனா அந்த குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றில் C குழுவில் முதலிடம் வந்த பிரான்ஸ் அணியுடன் நொக் அவுட் போட்டியில் மோதவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான பலப்பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை (30) கசானில் நடைபெறவுள்ளது.

மொரோக்கோவை போராடி சமன் செய்த ஸ்பெயின்: போர்த்துக்கலுக்கு மற்றொரு அதிர்ச்சி முடிவு

இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் ரஷ்ய நேரப்படி செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற போட்டியில் நெருக்கடியுடன் களமிறங்கிய ஆர்ஜன்டீன அணிக்கு பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ஆரம்பத்திலேயே கைகொடுத்து உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

14ஆவது நிமிடத்தில் மைதானத்தில் தொலைதூரத்தில் இருந்து பரிமாற்றிய பந்தை நேர்த்தியாக கட்டுப்படுத்தி எதிரணி கோல் கம்பத்திற்கு அருகில் கடத்திச் சென்று மெஸ்ஸி கோல் புகுத்தினார்.

இது இம்முறை உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட 100ஆவது கோல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோலை அடுத்து ஆர்ஜன்டீன அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நைஜீரிய பின்கள வீரர்களுக்கு அடிக்கடி நெருக்கடி கொடுத்தது.

முதல் பாதி: ஆர்ஜன்டீனா 1 – 0 நைஜீரியா

குரோஷியாவுடனான போட்டியில் தோற்ற ஆர்ஜன்டீன அணியில் ஐந்து மாற்றங்கள் செய்தே இந்த போட்டியில் களமிறங்கியது. இவர்களில் தனது முதல் சர்வதேச போட்டியில் ஆடுவதற்கு 31 வயது கோல்காப்பாளர் பிரன்கோ அர்மானியும் ஆர்ஜன்டீன அணியில் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

எனினும் நைஜீரிய அணியும் சளைக்காமல் ஆடி நெருக்கடி கொடுத்தது. ஜாவிர் மஸ்சரானோ இழைத்த தவறால் நைஜீரியாவுக்கு கிடைத்த பெனல்டி வாய்ப்பை பயன்படுத்தி 51 ஆவது நிமிடத்தில் விக்டர் மோசஸ் கோல் புகுத்தினார். இதனால் போட்டி சமநிலையை நோக்கி நெருங்கியது.    

இந்நிலையில் போட்டி முழு நேரத்தை எட்டுவதற்கு 4 நிமிடங்களே இருக்கும்போது மன்செஸ்டர் யுனைடெட் பின்கள வீரர் மார்கோஸ் ரோஜோ அதிர்ச்சி கோல் ஒன்றைப் பெற்று ஆர்ஜன்டீன அணியின் வெற்றியை உறுதி செய்தார். கோனர் திசையில் இருந்து காப்ரியல் மெசடோ பரிமாற்றிய பந்தை பெற்ற ரோஜோ அதனை வேகமாக உதைத்து வலைக்குள் புகுத்தினார்.   

இந்த கோலால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மெஸ்ஸி, ரோஜோவின் கழுத்துக்கு மேல் ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

உலகக் கிண்ணத்தில் நைஜீரிய அணிக்கு ஆர்ஜன்டீனா தொடர்ந்து சவாலாக இருந்து வருகிறது. நைஜீரியா, தென் அமெரிக்க அணிகளுக்கு எதிரான மொத்தம் ஆறு உலகக் கிண்ண போட்டிகளிலும் தோல்வியுற்றிருப்பதோடு அதில் ஐந்து தோல்விகள் ஆர்ஜன்டீனாவுக்கு எதிராக அமைந்துள்ளது.   

முழு நேரம்: ஆர்ஜன்டீனா 2 – 1 நைஜீரியா

கோல் பெற்றவர்கள்

ஆர்ஜன்டீனா – லியோனல் மெஸ்ஸி 14′, மார்கோஸ் ரோஜோ 86′
நைஜீரியா – விக்டர் மோசஸ் 51 (பெனால்டி)


குரோஷியா எதிர் ஐஸ்லாந்து

Getty Images

D குழுவில் மூன்று போட்டிகளிலும் வென்று மொத்தம் 9 புள்ளிகளுடன் குரோஷிய அணி வலுவான நிலையில் அடுத்த சுற்றில் ஆடவுள்ளது. குரோஷிய அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01) C குழுவில் இரண்டாவது இடத்தை பெற்ற டென்மார்க்கை எதிர்கொள்ளவுள்ளது.

ரெஸ்டோவ் ஓன் டோன்னில் ரஷ்ய நேரப்படி செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற போட்டியின் ஆரம்ப விசில் ஊதப்பட்ட விரைவில் ஐஸ்லாந்துக்கு கிடைத்த ப்ரீ கிக்கை கோலாக்கும் வாய்ப்பு பறிபோனது.

இதில் ஏற்கனவே நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற குரோஷியா இந்த போட்டியை அதிகம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த அணி தனது முன்னணி வீரர்களை ஆசனத்தில் அமர்த்தி வைத்தே போட்டியை ஆரம்பித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பெறத் தவறின.

முதல் பாதி: குரோசியா 0 – 0 ஐஸ்லாந்து

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்து 53 ஆவது நிமிடத்தில் ஐஸ்லாந்து கோல் கம்பத்தை நோக்கி குரோஷிய வீரர்கள் பெரிதாக நெருக்கடியின்றி பந்தை கடத்திவர மிலான் படல்ஜி அதனை வலைக்குள் புகுத்தினார்.  

கடைசி நிமிட கோல் மூலம் உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்த ஜெர்மனி

20 நிமிடங்கள் கழித்து ஐஸ்லாந்துக்கு சற்று நம்பிக்கை பிறந்தது. பொனல்டி எல்லைக்குள் வைத்து குரோஷிய வீரர் டேஜான் லொவ்ரேனின் கையில் பந்துபட்டதால் ஐஸ்லாந்துக்கு பெனால்டி கிடைத்தது. கில்பி சிகார்ட்சன் அதனை கோலாக மாற்றினார்.

இந்த பெனால்டியானது 2018 உலகக் கிண்ணத்தில் வழங்கப்படும் 17 ஆவது ஸ்பொட் கிக் வாய்ப்பாகும். இதன்படி ஒற்றை உலகக் கிண்ண தொடர் ஒன்றில் அதிக பெனால்டிகள் வழங்கப்பட்ட சாதனை சமநிலை செய்யப்பட்டுள்ளது. 1998 உலகக் கிண்ண போட்டியில் மொத்தம் 17 பெனால்டிகள் வழங்கப்பட்டதே அதிகமாக உள்ளது.  

போட்டி சமநிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இவான் பெரிசிக் (Ivan PERISIC) 90 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி குரோஷிய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

எனினும் வெறுமனே 300,000 மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து உலகக் கிண்ணத்தில் ஆடிய மிகச்சிறிய நாடு என சாதனை படைத்திருக்கும் நிலையில் இம்முறை உலகக் கிண்ணத்தில் அந்த அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கௌரவத்துடனேயே நாடு திரும்புகிறது.    

முழு நேரம்: குரோஷியா 2 – 0 ஐஸ்லாந்து

கோல் பெற்றவர்கள்

குரோஷியா – மிலான் படல்ஜி 53′, இவான் பெரிசிக் 90′
ஐஸ்லாந்து –  கில்பி சிகார்ட்சன் 76′ (பெனால்டி)

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<