மழையினால் கைவிடப்பட்ட இளையோர் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி

249

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கு இடையே தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இளையோர் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி தமது சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இளையோர் டெஸ்ட் தொடரில் விளையாடியதனை அடுத்து இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒரு நாள் தொடரில் ஆடுகின்றது. இந்த இளையோர் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியே இன்று தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகி பின்னர் மழையின் சீற்றத்தினால் கைவிடப்பட்டிருக்கின்றது.

ஆட்டம் மழையினால் கைவிடப்பட முன்னர்

முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 207 ஓட்டங்களை குவித்தது. இதில் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்காக சோனால் தினுஷ அரைச்சதம் (59) பெற்றிருந்ததோடு பங்களாதேஷ் இளம் அணியின் பந்துவீச்சில் ரிட்டுன்ஜோய் செளத்ரி 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

Read: பயிற்சிப் போட்டியில் அதிசிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி

தொடர்ந்து வெற்றி இலக்கான 208 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 13.2 ஓவர்களில் 66 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது.

ஸ்கோர் சுருக்கம்

இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி – 207/9 (50) சோனால்  தினுஷ 59, நவோத் பராணவிதான 33, நிப்புன் தனன்ஞய 32, அவிஷ்க தரிந்து 23, ரிட்டோன்ஜோய் செளத்ரி 4/46, ரகிபுல் ஹசன் 2/25, சொரிபுல் இஸ்லாம் 2/50

பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி – 66/1 (13.2)