இம்ரான் கானிடமிருந்து இலங்கை வீரர்களுக்கு முக்கிய அறிவுரை

263
Imran Khan

ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் பிரவேசித்து சுமார் 14 வருடங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த பிறகு தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக உள்ள தனக்கு கிரிக்கெட் விளையாட்டு தான் பொறுமையையும், விடா முயற்சியையும் கொடுத்திருந்ததாக தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அதை அர்ஜுன ரணதுங்க போன்ற வீரர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.  

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் (23) இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய நேர விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.

>> இந்தியாவில் வைத்து கிரிக்கெட்டுக்கு திரும்பும் சனத் ஜயசூரிய

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (24) இடம்பெற்ற இந்நிகழ்வில், சபாநாயகர், அமைச்சர்ககள், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் இலங்கை விளையாட்டில் பல பெருமைகளைப் பெற்றுக்கொடுத்த நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்

இந்த நிகழ்வில் பேசிய இம்ரான் கான், தனது கிரிக்கெட் சகபாடியும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்கவின் பெயரை பல தடவைகள் தனது உரையின் போது குறிப்பிட்டு, இலங்கை கிரிக்கெட் அணி எவ்வாறு பல தடைகளைத் தாண்டி 1996 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது என்பது பற்றி தெளிவுபடுத்தினார். அவர் மேலும் கூறுகையில் ,

“முதலில் என்னையும் எனது தூதுக்குழுவினரையும் இலங்கைக்கு வரவேற்று உபசரித்தமைக்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இலங்கைக்கு புதியவனல்ல. நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடனேயே ஒரு கிரிக்கட் வீரனாக இலங்கைக்கு வந்தேன்.

அன்றிலிருந்து இலங்கை தொடர்பான சிறந்த நினைவுகளை நான் கொண்டிருக்கிறேன். டெஸ்ட் அந்தஸ்தற்ற நிலையிலிருந்து உலகக் கிண்ணத்தை வென்றதுவரை இலங்கை கிரிக்கெட் அணி வளர்ச்சியடைந்து வந்ததை நாம் பார்த்திருக்கிறோம்

உலகக் கிண்ணத்தைக் கூட இலங்கை அணி பாகிஸ்தானில் வைத்தே வென்றது. நானும் எனது கிரிக்கட் அணியினரும் இலங்கை கிரிக்கெட் அணியின் பரிணாம வளர்ச்சியை கண்டிருக்கிறோம். எமது துணைக்கண்டத்தைச் சேர்ந்த நாடு என்ற வகையில் இலங்கை அணி ஓர் உலகத்தரம் வாய்ந்த அணியாக வளர்ச்சியடைந்ததைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைந்தோம்

>> ideo – Dimuth, Dasun இன் கேப்டன்சியில் சாதிக்குமா இலங்கை அணி? | Sports RoundUp – Epi 150

இந்த விஜயம் வரைக்குமான இலங்கையுடனான எனது உறவை நினைவூட்டவே இந்த விடயங்களை இங்கு குறிப்பிடுகிறேன்.

அதேபோல, எனது 18 வயதில் கிரிக்கெட் வாழ்க்கைக்கு காலடி எடுத்துவைத்தேன். ஆரம்பத்தில் நான் தோல்விகளை சந்தித்தேன். என்னால் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது. இங்கிலாந்து போன்ற அணிகளை வீழ்த்த முடியாது என்று நான் விளையாடிய போது இருந்த அணித் தவைவர்கள், முன்னாள் வீரர்கள் அடிக்கடி சொன்னார்கள்

ஆனால் அவ்வாறான மனநிலையில் இருந்து பாகிஸ்தான் அணியை மீட்டி இங்கிலாந்து அணியையும் வீழ்த்தியதுடன் 1992இல் ஒருநாள் உலகக் கிண்ணத்தையும் கைப்பற்ற முடிந்தது” என அவர் தெரிவித்தார்

இதுஇவ்வாறிருக்க, குறித்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சினால் கிரிமண்டல பகுதியில் நிர்மாணிக்கவுள்ள விளையாட்டு உயர் செயற்றிறன் நிலையத்துக்கான முன்மொழிவு அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் பாகிஸ்தான் பிரமரிடம் கையளிக்கப்பட்டது

குறித்த நிலையத்தின் ஊடாக பாய்தல், எறிதல் நிகழ்ச்சிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், விளையாட்டு தொழில்நுட்ப ஆய்வகமும், அதிநவீன வசதிகளைக் கொண்ட விளையாட்டு பகுப்பாய்வு மையமும் நிர்மாணிக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

>> இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் போட்டி அட்டவணை வெளியானது!

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 52 மில்லியன் ரூபா அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் 1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம, முத்தையா முரளிதரன், ரொமேஷ் களுவிதாரன, ப்ரமோத்ய விக்ரமசிங்க, சமிந்த வாஸ், சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் மற்றும் இன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<