தென்னாபிரிக்காவுக்கும் இலங்கை அணிக்குமிடையிலான விறுவிறுப்பான மூன்றாவதும் இறுதிப் போட்டியுமான T-2 போட்டியில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் ஒரு பந்து மீதமிருக்க இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

Photos: Sri Lanka v South Africa | 3rd T20I

Photos of the Sri Lanka v South Africa | 3rd T20I where Sri Lanka Cricket Lions recorded their first series win of the tour. Read: Dickwella, Prasanna power Sri Lanka to memorable series win

கேப்டவுன் நியூலேண்டில் நடைபெற்ற தீர்மானம் மிக்க இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணியில் மூன்று  பாரிய மாற்றங்களும், இலங்கை அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

தென்னாபிரிக்கா சார்பாக ஹீனோ குன்னுக்கு பதிலாக ரீசா ஹன்றிக்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். அதே நேரம் ஆறு மாதங்களுக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் பிரசன்னமாகும் ஏ.பிடி.வில்லியசுக்காக துனிஸ் டி புரின் அணியிலிருந்து வெளியேறினார். அத்துடன் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான டேன் பீடர்சன், ஆரோன் ப்ஹன்கிசோவுக்கு பதிலாக அணியில் உள்ளவாங்கப்பட்டிருந்தார்.

இலங்கை அணிக்காக கடந்த T-2௦ போட்டியில் காயமுற்ற அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்சுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உபுல் தரங்க களமிறங்கினார். மேலும், எதிர்வரும் ஒரு நாள் போட்டிகளுக்கு உபுல் தரங்க தலைமை தாங்கவுள்ள நிலையில் இந்த போட்டியில் தினேஷ் சந்திமல் அணியை வழி நடாத்தினார்.  அத்துடன் கடந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய லக்ஷன் சண்டகன் அணிக்கான தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டதோடு சுரங்க லக்மாலுக்கும் தொடர்ந்தும் ஓய்வளிக்கப்பட்டது.

>> இலங்கை அணித் தலைவராக உபுல் தரங்க: வீரக்கொடி மற்றும் மதுஷங்க ஒருநாள் குழாமில்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அவ்வணியின் முதல் விக்கெட் 36 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் வீழ்த்தப்பட்டது.

பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய டி வில்லியர்ஸ் 3 சிக்சர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உள்ளடங்கலாக 44 பந்துகளுக்கு முகம்கொடுத்து 63 ஓட்டங்களுடம் தனது மீள்வருகையை சிறப்பான முறையில் ஆரம்பித்தார்.

அவரது இந்த பங்களிப்புடன் தென்னாபிரிக்க அணி தமது இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் இலங்கை அணியின் குலசேகர, சண்டகன் மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

பின்னர் 17௦ ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நிரோஷன் டிக்கவெல்ல மற்றும் உபுல் தரங்க ஆகியோர் களமிறங்கினர்.  முதல் விக்கெட்டுக்காக நான்கு ஓவர்களுக்கு 36 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் வைன் பார்னெல்ளின் பந்து வீச்சில் உபுல் தரங்க 2௦ ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் சந்திமல் மீண்டும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், மூன்றாவது விக்கெட்டுக்காக நிரோஷன் டிக்வெல்லவுடன் இணைந்து 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று, அணியின் வெற்றிப் பாதைக்கான அடித்தளத்தை இட்டார்.

வைன் பார்னெல் பந்து வீசிய ஆறாவது ஓவரில், தொடர்ச்சியாக மூன்று பிடியெடுப்புகள் பார்னெல் உள்ளடங்கலாக தென்னாபிரிக்க களத்தடுப்பு வீரர்களால் கைநழுவவிடப்பட்டன. அத்துடன் இந்த போட்டியில் மொத்தமாக 6 க்கும் மேற்பட்ட பிடியெடுப்புகளை நழுவ விட்டு தென்னாபிரிக்க அணி, மிக மோசமான களத்தடுப்பில் ஈடுபட்டதை காணக் கூடியதாக இருந்தது.

எனினும், 16ஆவது ஓவரில் பந்து வீசிய இம்ரான் தாஹிர், இரு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். இறுதி நான்கு ஓவர்களுக்குள் வெற்றி பெற 52 ஓட்டங்களை பெற வேண்டிய கடினமான நிலை இலங்கைக்கு இருந்தது.

17ஆவது ஓவரில் பந்து வீசிய வைன் பார்னெலை துவம்சம் செய்த சீக்குகே பிரசன்ன, குறித்த ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உள்ளடங்கலாக 19 ஓட்டங்களை விளாசி வெற்றி வாய்ப்பை அதிகரித்தார்.

>> கிறிஸ் கெயில், பொல்லார்ட், மஹேல ஆகியோரை வழிநடாத்தவுள்ள குமார் சங்கக்கார!

இறுதியில், 3 ஓவர்களுக்கு 33 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் டேன் பீடர்சன்னின் ஓவரில் குசல் மெடிஸ் ரன் அவுட் ஆனார். அதே நேரம் அந்த ஓவரில் 7 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும், இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகத்தை பிரதிநித்துவப்படுத்தும் சீக்குகே மற்றும் அசேல குணரத்ன இருவரும் இணைந்து அண்டிலின் ஓவரில் (19ஆவது ஓவர்) 15 ஓட்டங்களை விளாசியதால், இறுதி ஓவரில் 11 ஓட்டங்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இறுதி ஓவரை வீசிய அறிமுக பந்து வீச்சாளர் பீடர்சனின் முதல் பந்து அசேல குணரட்னவினால் பவுண்டரிக்கு விரட்டப்பட்டது. தொடர்ந்து, இரண்டு ஒற்றை ஓட்டங்களும் அதன் பின்னர் மீண்டும் பவுண்டரியும் பெறப்பட்டு போட்டி சமநிலையுற்றது.

இதன்போது, வெற்றி பெற்றதாக நினைத்து அசேல விக்கெட் கம்பத்தை கையில் எடுத்தமையினால் சற்று குழப்ப நிலை ஏற்பட்டது. எனினும், மீண்டும் துடுப்பாடிய அசேல எஞ்சிய ஓட்டத்தையும் அடுத்த பந்தில் பெற, இலங்கை அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக துடுப்பாடிய நிரோஷன் டிக்வெல்ல தனது T-2 கிரிக்கெட் வாழ்க்கையில் கூடிய ஓட்டங்கலாக 68 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை, இறுதி ஓவர்களில் தனது அதிரடியால் அணியை வெற்றிக்கு வழி நடாத்திய சீக்குகே பிரசன்ன ஆட்டமிழக்காமல் 16 பந்துகளுக்கு 37 ஓட்டங்களை விளாசினார்.

அத்துடன், அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் இல்லாத நெருக்கடியான நிலையிலும் தீர்மானம் மிக்க  இந்த போட்டியில் வெகு சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணி வரலாற்றில் கூடிய வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றிகரமாகக் கடந்து சாதனை படைத்தது.

எனவே, இத்தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகும்.

போட்டியின் முக்கிய காட்சிகள்

போட்டி விபரம்