தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் – மாலிங்க

1202

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நாளை (4) நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, இலங்கை அணி ஒவ்வொரு தோல்விகளிலும் இருந்து கற்றுக்கொண்டு அடுத்தப் போட்டிக்காக தயாராகவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாளை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ள போட்டி குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆப்கானிஸ்தான் சுழலுக்கு பதில் கூறுமா இலங்கை?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம்…..

“நாம் கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு முறையும் அடையும் தோல்வியை சாதாரணமாக விட்டுவிட்டு அடுத்த போட்டியில் வெற்றிபெறுவோம் என காரணம் கூறுகின்றோம். குறித்த தோல்வியில் இருந்து நாம் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. இப்படி கிரிக்கெட் விளையாட முடியாது. நாம் ஒவ்வொரு முறையும் அடையும் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு அந்த தவறினை திருத்திக்கொள்ள வேண்டும்.

நான் நான்கு உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளேன். ஆனால், நாளைய போட்டி குறித்த அழுத்தம் என்னிடம் இருக்கிறது. குறித்த அழுத்தத்தை அணியின் அனைத்து வீரர்களும் உணர வேண்டும். அழுத்தம் இல்லாம் எந்த போட்டியிலும் விளையாட முடியாது. அவ்வாறு அழுத்தம் இல்லாமல் ஒருவர் விளையாடுகிறார் என்றால் அவரால் நூறு சத வீதத்தை அணிக்கு வழங்க முடியாது.

வீரர் ஒருவர் போட்டியொன்றில் தவறொன்றை விடுவாராயின் அவர் அதனை திருத்திக்கொண்டு விளையாட வேண்டும். அதேநேரம் எதிரணியின் பலத்தை அறிந்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீரரும், தங்களுடைய திறமையை குறித்த போட்டியில் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு விளையாடா விட்டால் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. எனவே, ஒவ்வொரு வீரரும் தங்களை மனரீதியில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீரர்களிடத்திலும் நாளைய போட்டியில் இருந்து மாற்றம் உண்டாகும் என எதிர்பார்க்கிறேன்”

இதேவேளை, மாலிங்க கடந்த காலங்களில் அதிகமாக T20 போட்டிகளில் விளையாடி வருகின்றார். ஒருநாள் போட்டிகளில் இவரது உடற்தகுதி அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், ஒருநாள் போட்டிக்காக எவ்வாறு தயாராகியிருக்கிறார் என்பது தொடர்பில் மாலிங்க குறிப்பிடுகையில்,

“T20 போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது கடினமான விடயம். ஆனாலும், எனது உடற்தகுதியை சிறப்பாக வைத்துக்கொள்ளும் வகையில் ஓவர்களை தெரிவுசெய்யவேண்டும். எவ்வாறாயினும், அணித் தலைவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப என்னால் ஓவர்களை வீச முடியும். நான் நூறு சதவீதம் உடற்தகுதியுடன் இருப்பதுடன், நாளைய போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண போட்டி நாளை (04) கார்டிப்பில் உள்ள ஷோபியா கார்டன் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<