கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று நிறைவடைந்திருக்கின்றது. மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணியினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் சவால் கூடிய வெற்றி இலக்கான 490 ஓட்டங்களை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் தென்னாபிரிக்க அணி 139 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை தடுமாற்றத்துடன் காணப்படுகின்றது.
பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும்…
கடந்த வெள்ளிக்கிழமை (20) ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்சுக்காக 338 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், தென்னாபிரிக்க அணியினர் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களினை சமாளிக்க முடியாமல் 124 ஓட்டங்களுடன் அவர்களது முதல் இன்னிங்ஸில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, 214 ஓட்டங்கள் என்ற ஆரோக்கியமான முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, நேற்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது தனுஷ்க குணத்திலக்க, திமுத் கருணாரத்ன ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியோடு 3 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை குவித்திருந்தது. களத்தில் அரைச்சதம் தாண்டிய திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களுடனும், அஞ்செலோ மெதிவ்ஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.
இன்று போட்டியின் மூன்றாம் நாளில், தென்னாபிரிக்காவை விட மொத்தமாக 365 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணி, இந்த முன்னிலையை மேலும் அதிகரித்து தமது விருந்தினர்களுக்கு கடின வெற்றி இலக்கு ஒன்றினை நிர்ணயிக்கும் நோக்கில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.
அந்தவகையில், மூன்றாம் நாளுக்கான மதிய போசணத்திற்கு பின்னர் தமது இரண்டாம் இன்னிங்சை 81 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை குவித்திருந்தவாறு இடைநிறுத்திய இலங்கை அணி மிகவும் சவாலான 490 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
இளம் தனன்ஜயவின் அதிரடி மாற்றத்திற்கான காரணங்கள்
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில், இன்று மேலதிகமாக 26 ஓட்டங்களை பெற்று திமுத் கருணாரத்ன மொத்தமாக 85 ஓட்டங்களைக் குவித்திருந்தார். 12 பெளண்டரிகளை விளாசிய திமுத் கருணாரத்னவுக்கு இத்தொடரில் நான்காவது அரைச்சதமாக இது அமைந்திருந்த அதே நேரம், தனது 37 ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் அஞ்செலோ மெதிவ்ஸ் 71 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்துடன் ரொஷேன் சில்வா 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்று தனது பங்களிப்பினையும் வழங்கியிருந்தார்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் சுழல் பந்து வீச்சாளரான கேசவ் மஹராஜ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் எட்டப்பட்ட அதிகூடிய வெற்றி இலக்கு 414 ஓட்டங்களாகும். இந்த ஓட்டங்களை தென்னாபிரிக்க அணியே 2008ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட்டில் பெற்றிருந்த காரணத்தினால் வரலாறு படைக்கும் நோக்கு ஒன்றுடன் இலங்கை அணியுடனான இந்த டெஸ்ட் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.
தொடக்கத்தில் தென்னாபிரிக்க அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க ஒரிரு விக்கெட் கைப்பற்றும் சந்தர்ப்பங்களிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொண்டனர். அவர்களின் முதல் விக்கெட்டாக எய்டன் மார்க்ரம் 14 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்த போதிலும், மூன்றாம் நாளின் தேநீர் இடைவளை வரை அவர்கள் வேறு எந்த விக்கெட்டையும் பறிகொடுக்கவில்லை.
தொடர்ந்த ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணிக்கு இரண்டாவது விக்கெட்டுக்காக டீன் எல்கார், தியோனிஸ் டி ப்ரெய்ன் ஜோடி அரைச்சத இணைப்பாட்டம் (53) ஒன்றை பகிர்ந்தது. இலங்கை அணிக்கு சற்று நெருக்கடியை உருவாகியிருந்த இந்த இணைப்பாட்டத்தை இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் தில்ருவான் பெரேரா, டீன் எல்காரின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். LBW முறையில் ஆட்டமிழந்த எல்கார் 37 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எல்காரின் விக்கெட்டை அடுத்து இலங்கை அணியின் சுழல் வீரர்கள் தமது திறமையை வெளிக்காட்ட தொடங்கினர். புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ஹஷிம் அம்லா ஹேரத்தின் சுழலில் சிக்கி போல்ட் செய்யப்பட, அகில தனஞ்சயவின் அடுத்தடுத்த பந்துகளில் தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளேசிஸ் மற்றும் கேசவ் மஹராஜ் ஆகியோர் குறைவான ஓட்டங்களுடன் வீழ்ந்தனர். இவ்வாறாக தென்னாபிரிக்க அணி முக்கிய வீரர்களை பறிகொடுக்க, போட்டியின் ஆதிக்கம் இலங்கை அணியின் பக்கம் சாய்ந்தது.
குறுகிய ஓட்ட இடைவெளிக்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த தென்னாபிரிக்க அணி அதிக அழுத்தங்கள் உருவாகிய காரணத்தினால் மிகவும் பொறுமையாக துடுப்பாடி போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், 41 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
காலி கிரிக்கெட் மைதானம் தக்கவைக்கப்படுமா? அகற்றப்படுமா? – தொடரும் சர்ச்சை
தென்னாபிரிக்க அணியின் நம்பிக்கைக்குரிய வீரர்களான தியோனிஸ் டி ப்ரெய்ன் 45 ஓட்டங்களுடனும், டெம்பா பவுமா 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ரங்கன ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமது பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயற்பாட்டினால் போட்டியின் நாளைய நான்காம் நாளில், இலங்கை அணிக்கு வெற்றி பெற இன்னும் 5 விக்கெட்டுக்களையே கைப்பற்ற வேண்டி இருப்பதுடன், தென்னாபிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைப்படுத்த இன்னும் 351 ஓட்டங்களை பெற்று போராட வேண்டிய நிலைமை இருக்கின்றது.
ஸ்கோர் விபரம்
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















