உள்ளூர் போட்டிகளில் விளையாட டிக்வெல்ல, மெண்டிஸ், குணதிலக்கவுக்கு அனுமதி

Sri Lanka Cricket

2012

இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தீர்மானித்துள்ளது.

இவர்கள் மூவருக்கும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது, உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஒருவருட தடை மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட 6 மாத தடையும் விதிக்கப்பட்டதுடன், 10 மில்லியன் ரூபா வரையிலான அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும், உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் நிறைவுக்கு வரும் நிலையில், குறித்த காலப்பகுதிக்கு முன்னர் தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த தீர்மானம், இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமைத்துவ உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, “குறித்த வீரர்கள் அபராதத்தொகையொன்றினை செலுத்தும் காரணத்தினால், மீண்டும் அவர்களை விளையாடுவதற்கு அனுமதிக்க முடியும் என நாம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் அறிவிப்போம்” என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா டெய்லி மிரர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<