சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, தமது சுழல் பந்து வீச்சாளர்கள் மூலம் முழுமையாக பங்களாதேஷை இலங்கை அணி மடக்கியுள்ளதுடன், 182 ஓட்டங்களால் முன்னிலையும் பெற்றுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், தமது முதல் இன்னிங்சிற்காக, திடமான துடுப்பாட்டத்தினை காண்பித்து 133 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்த பங்களாதேஷ் அணி, அரைச்சதம் கடந்திருந்த செளம்யா சர்க்கார் (66) மற்றும் அணித்தலைவர் முஸ்பிகுர் ரஹீம் (1)  ஆகியோருடன் மூன்றாம் நாளான இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தது.

இன்றைய நாளுக்காக போட்டி ஆரம்பித்து சிறிது கணத்திலேயே, வெறும் 5 ஓட்டங்களினை மாத்திரம் குவித்து செளம்யா சர்க்கார், லக்மாலின் பந்து வீச்சில் வீழ்ந்தார். ஆட்டமிழக்கும் போது, சர்க்கார் மொத்தமாக, 8 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், அணித்தலைவர் மட்டும் போராட பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசை வீரர்களை ஒவ்வொருவராக இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றிக் கொண்டனர். பங்களாதேஷில் இன்றைய போட்டியில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சகல துறை ஆட்டக்காரரான சகீப் அல் ஹஸன் 23 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனையடுத்து, களம் நுழைந்த மெஹதி ஹஸன் அணித்தலைவர், முஸ்பிகுர் ரஹீமுடன் கைகோர்த்து 7ஆவது விக்கெட்டிற்காக வலுவான இணைப்பாட்டம் ஒன்றிற்கு அத்திவாரமிட முனைந்தபோது, போட்டியில் மதிய போசண இடைவேளை அறிவிக்கப்பட்டிருந்தது.

இடைவேளை முடிய, துடுப்பாட வந்த வீரர்கள் இருவரும் இணைந்து சாதுர்யமான ஆட்டத்தினை வெளிக்காட்டி 7ஆவது விக்கெட்டுக்காக 106 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியினை சிறப்பாக வழிநடாத்திக் கொண்டிருந்தனர். இந்த இணைப்பாட்டத்தின் இடையே, புதிய பந்து எடுக்கப்பட்டும் இலங்கை அணியால் எதிரிணியின் இணைப்பாட்டத்தினை தகர்ப்பதற்கு கடினமாய் இருந்தது.

இரட்டை சதத்தினை தவறவிட்ட மெண்டிஸ்; திடமான ஆரம்பத்தினை வெளிக்காட்டிய பங்களாதேஷ்

எனினும், தில்ருவன் பெரேரா மெஹதி ஹசனை தனது மாய சுழல் மூலம்  LBW முறையில் வீழ்த்தினார். மெஹதி ஹசன் பெறுமதி மிக்க 45 ஓட்டங்களினை 5 பவுண்டரிகள் உள்ளடங்களாகப் பெற்றிருந்ததோடு, பலோவ் ஒன் (Follow-on) ஆக இருந்த பங்களாதேஷ் அணியை அதிலிருந்து காப்பதில் பெரும் பங்காற்றியிருந்தார்.

ஹசனின் விக்கெட்டினைத் தொடர்ந்து, புதிதாக வந்த தஸ்கின் அஹமட்டை மீண்டும் LBW முறையில் வீழ்த்திய பெரேரா ஹட்ரிக் வாய்ப்பொன்றினைப் பெற்றுக் கொண்டார். எனினும், அவரால் அதனை பூர்த்தி செய்ய முடியவில்லை.

பின்னர், பங்களாதேஷ் மூன்னூறு ஓட்டங்களினை கடந்த வேளையில், அணித்தலைவர் முஸ்பிகுர் ரஹீம், இலங்கை அணித்தலைவர் ஹேரத்தினால் இலகுவான முறையில் போல்ட் செய்யப்பட அணிக்காக போராடிய முக்கிய வீரரின் விக்கெட்டினை பங்களாதேஷ் பறிகொடுத்தது. இந்நிலையில், போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தேநீர் இடைவேளையும் வீரர்களிற்கு வழங்கப்பட்டு, நிலைமை சீரானதின், பின்னர் போட்டி ஆரம்பிக்கப்பட்டு, ரங்கன ஹேரத் கைப்பற்றிய பங்களேஷ் அணியின் இறுதி விக்கெட்டுடன், 97.2 ஓவர்களிற்கு 312 ஓட்டங்களினை அவ்வணி முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியில், அதிகபட்சமாக அணித்தலைவர் முஸ்பிகுர் ரஹீம் நீண்ட நேரம் ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி, 85 ஓட்டங்களை 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாகப் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், ரங்கன ஹேரத் மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர். சக வீரர்களின் மோசமான களத்தடுப்பினால், விக்கெட்டுகளை பெறுவதில் சிரமப்பட்ட சுரங்க லக்மால் மற்றும் லக்‌ஷான் சந்தகன் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டினைப் பெற்றிருந்தனர்.

பின்னர், போட்டியில் மழையின் குறுக்கீடு காணப்பட்டதால், 51.2 ஓவர்களே வீசப்பட்ட இன்றைய நாள் கைவிடப்பட்டு, போட்டியின் நான்காம் நாள், வழமையான நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாக தொடங்கும் என போட்டி மத்தியஸ்தர்களால் அறிவிக்கப்பட்டது.

போட்டியின் நான்காம் நாள் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்