ஆகாஸின் சுழலின் உதவியுடன் இலங்கை இளையோர் அணிக்கு வெற்றி

 Sri Lanka Under-19s tour of West Indies 2025

8
Akash

மேற்கிந்திய தீவுகள் 19 வயதின் கீழ் அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியினை பெற்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை இளையோர் அணி 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

>>இலங்கை T20I தொடருக்கான ஜிம்பாப்வே குழாம் வெளியீடு<<

இதில் முதல் போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்விக்கண்ட இலங்கை அணி இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் பணிப்பின்படி களத்தடுப்பில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி 47.5 ஓவர்கள் நிறைவில் 201 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஜோசுவா டோர்ன் அதிகபட்சமாக 82 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ்பேசும் வீரர் விக்னேஷ்வரன் ஆகாஸ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக சாய்க்க, கவிஜ கமகே மற்றும் விரான் சமுதித்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி சார்பில் தலைவர் விமத் டின்சர அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சாமிக்க ஹீனட்டிகல 30 ஓட்டங்களையும், இறுதிவரை களத்தலிருந்து  செத்மிக்க செனவிரத்ன 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

>>மிச்சல் ஸ்டார்க் T20I கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு<<

செத்மிக்க செனவிரத்ன கடைசி விக்கெட்டுக்காக விக்னேஷ்வரன் ஆகாஸின் உதவியுடன் அணியை 48 ஓவர்கள் நிறைவில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஷக்காரி கார்டர் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஏழு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமனிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

மே.தீவுகள் இளையோர் அணி – 201 (47.5), ஜோசுவா டோர்ன் 82, ஜொனதன் வென் லேங் 26, விக்னேஷ்வரன் ஆகாஸ் 3/30

 

இலங்கை இளையோர் அணி – 204/9 (48), விமத் டின்சர 45, சாமிக்க ஹீனட்டிகல 30, ஷக்காரி கார்டர் 3/42

 

முடிவு – இலங்கை இளையோர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<