பங்களாதேஷ் இளையோர் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் துடுப்பாடும் இலங்கை

 

பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இளையோர் டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் மழையால் தடைப்பட்ட நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்றது. 

பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை இளையோர் அணி இரண்டு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 

நான்கு நாட்கள் கொண்ட முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகவிருந்த நிலையில் முதல் இரண்டு நாள் ஆட்டங்களும் சீரற்ற காலநிலை காரணமாக முற்றாக தடைப்பட்டது. இந்நிலையில் மழைக்கு மத்தியில் மூன்றாவது நாளான இன்று முதல் முறை வீரர்கள் மைதானத்தில் களமிறங்கினர். 

டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு

டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் 2 டெஸ்ட் கிரிக்கெட்……

பரிசால் (Barisal) அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் நிபுன் தனன்ஜய முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். எனினும் இலங்கை அணி இரண்டாவது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 

காலி, ரிச்மண்ட் கல்லூரியின் தவீஷ கஹடுவாரச்சி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் துடுப்பாடிய அஹான் விக்ரமசிங்க 45 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரவின்து ரசன்த 21 ஓட்டங்களை பெற்ற நிலையில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இன்றைய தின ஆட்டமும் 36 ஓவர்களுக்கு சுருங்கியது. இதில் கொழும்பு, மஹாநாம கல்லூரியின் சொனால் தினுஷ 46 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் நிபுன் தனன்ஜய 19 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். 

இதன்படி இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியின் அசாதுல்லா காலிப் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். 

போட்டியின் சுருக்கம்

இலங்கை இளையோர் அணி (முதல் இன்னிங்ஸ்) – 155/3 (36) – சொனால் தினுஷ 46*, அஹான் விக்ரமசிங்க 45, அசாதுல்லா காலிப் 2/29

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<