சம்மு அஷான் அசத்த, கிண்ணம் வென்ற இளம் அணி

175
Gamini Dissanayake Challenge Trophy

முன்னாள் ஆனந்த கல்லூரியின் தலைவரும், தற்போதைய இலங்கை 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணியின் உப தலைவருமான சம்மு அஷான் சகல துறைகளிலும் அசத்த,

தென்னாபிரிக்க 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணியுடன் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணி காமினி திஸாநாயக்க கிண்ணத்தை வெற்றிகொண்டது.

18 வயது சகலதுறை வீரர் சம்மு அஷான், ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்கள் குவித்து, 3 விக்கட்டுகளைக் கைப்பற்றி, 4 பிடிகளைப் பிடித்து சகல துறைகளிலும் அசத்திப் போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடரின் ஆட்ட  நாயகன் விருதுகளைத் தட்டிச்சென்றார்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க 19 வயதிற்குற்பட்ட அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கை வேகப் பந்து வீச்சாளர்களை முகம் கொடுப்பதில் எந்தத் தயக்கமும் காணப்படவில்லை. முதலாவது பவர் ப்லே முடிவடையும் போது விக்கட்டுகளை இழக்காமல் 38 ஓட்டங்களைப் பெற்று நல்ல நிலையில் தென்னாபிரிக்க 19 வயதிற்குற்பட்ட அணி காணப்பட்டது. எனினும் 10ஆவது ஒவரில் சுழற்பந்து வீச்சாளரான சம்மு அஷான் பந்து வீச தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் வஸ்கொன்செலோஸ் அவரது பந்திற்கு முகம் கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 13ஆவது ஓவரில் இடதுகை பந்து வீச்சாளரான தமித்த சில்வாவின் பந்து வீச்சில், ஸ்லிப் திசையில் இருந்த சம்மு அஷானிடம் பிடி கொடுத்து தென்னாபிரிக்க வீரர் மக்வெடு 26 ஓட்டங்களைப் பெற்று இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த ஓவரில் ஆட்ட  நாயகனின் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஜெரோமி பொஸர் 1 ஓட்டம் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு நல்ல ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்ட போதும் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தென்னாபிரிக்க அணி சற்றுத் தடுமாறியது.

4ஆவது விக்கட்டுக்காக இணைந்த தலைவர் வியான் மல்டர் மற்றும் ரெய்னார்ட் வான் டொன்டர் 70 ஓட்டங்களை இணைப்பாகப் பெற்றுக்கொண்டு தென்னாபிரிக்க அணியை சற்று வலுப்படுத்தினார். இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பொழுதும் தலைவர் மல்டர் கொடுத்த பிடியை பிரவீன் ஜெயவிக்ரம தவறவிட்டதும், மல்டரின் இலகுவான ஸ்டம்பிங் வாய்ப்பை நவிந்து நிர்மல் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க 37ஆவது ஓவரில் வான் டொன்டர் பிரவீன் ஜெயவிக்ரமவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து சென்றார். தொடர்ந்து துடுப்பெடுத்தாடவந்த ஈதன் 20 ஓட்டங்களைப் பெற, தலைவர் மல்டர் 50 ஓட்டங்களைத் தாண்டி தனது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். சிறப்பாகப் பந்து வீசிய சில்வா தொடர்ந்து இரு பந்துகளில் மல்டர் மற்றும் ஜெஸ்ஸி கிறிஸ்டென்சன் ஆகியோர்களை ஆட்டமிழக்கச் செய்ய தென்னாபிரிக்க 19 வயதிற்குற்பட்ட அணி தடுமாற்றத்தைச் சந்தித்தது. இறுதி வரிசைத் துடுப்பாட்ட வீரர் கெனன் ஸ்மித் 20 ஓட்டங்களைப் பெற 9 விக்கட்டுகளைப் பறித்து 195 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்க அணியை மட்டுப்படுத்தியது இலங்கை அணி.

196 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தொடரை கைப்பற்றும் நோக்கோடு தமது துடுப்பாட்டத்தைத் துவங்கியது. சிறப்பான ஆரம்பத்தை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் போக பத்தும் நிசங்க 2ஆவது ஓவரில் LBW முறையில் ஆட்டமிழந்தார். தலைவர் அவிஷ்க பெர்னாண்டோ முன்னைய போட்டியில் போன்று சிறப்பாக துடுப்பெடுத்தாடுவார் என்று எதிர்பார்த்த போதும் 16 ஓட்டங்களுக்கு செனிடினின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்தார்.

10 ஓட்டங்களைப் பெற்று இருந்த நிலையில் மிஷென் சில்வாவும் மல்டரின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழக்க, 66 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து இலங்கை அணி சற்றுத் தடுமாறியது. கண்டி திரித்துவக் கல்லூரி மாணவன் ஷனோகீத் சண்முகநாதன் 66 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக  41 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு நம்பிக்கையூட்டினார். எனினும் 25ஆவது ஓவரில் ஷனோகீத் ஆட்டமிழக்க இலங்கை அணியின் வெற்றி கேள்விக்குள்ளானது.

தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்வதுக்கு உப தலைவர் அஷானுக்கு துணையாக அமைந்த பண்டார, அஷானுடன் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி சிறந்த இணைப்பாட்டத்தைக் கட்டியெழுப்பினார். 5ஆவது விக்கட்டுக்காக அஷான் மற்றும் பண்டார 100 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற இலங்கை அணி 196 எனும் வெற்றி இலக்கை இலகுவாகக் கடந்தது. ஆட்ட நாயகன் சம்மு அஷான் 70 ஓட்டங்களையும் பண்டார 37 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இலங்கை 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணி 2-1 என்று தொடரை கைப்பற்றியது.

தென் ஆபிரிக்கா 19 வயதிற்குற்பட்ட அணி  – 50 (195/9) : மல்டர் 59, வான் டொன்டர் 37, வில்லியம் 26, ஏதன் போஷ் 20, கேனான் ஸ்மித் 20, தமித சில்வா 4/48, சம்மு  அஷான் 3/38

இலங்கை 19 வயதிற்குற்பட்ட அணி – 199/4 (45.5)  :  அஷான் 70 *, ஷனோகீத் சண்முகநாதன் 41, பண்டார 37 *,மல்டர் 2/32, வில்லியம் 2/33