இறுதி குழுநிலை ஆட்டத்தில் இலங்கை U19 அணிக்கு தோல்வி

72

19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான (U19) ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (28) அவுஸ்திரேலியா இலங்கையை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் ப்ளூம்பென்டெய்ன் நகரில் நடைபெற்ற குழு C அணிகளுக்கான இந்தப் போட்டி, ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதி குழுநிலை மோதலாகவும் அமைந்தது.

>>முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் பெற்ற இந்திய வீரர்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை  அணியானது முதலில் துடுப்பாட்டத்தை தமக்காக தெரிவு செய்து கொண்டது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் 49.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கைத் தரப்பில் அதிகபட்சமாக தினுர கலுப்பகன அரைச்சதம் விளாசி 78 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் கெலும் விட்லர் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மஹ்லி பேர்ட்மென் மற்றும் டொம் கெம்பல் ஆகியோர் 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 209 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் கிரிக்கெட்  அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 48.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

>>இலங்கை கிரிக்கெட் மீதான ICC இன் உறுப்புரிமை தடை நீக்கம்

அவுஸ்திரேலிய இளம் அணியின் வெற்றியை உறுதி செய்த றயான் ஹிக்ஸ் 77 ஓட்டங்களையும், ஹரி டிக்ஸன் 49 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் விஷ்வ லஹிரு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரரான றயான் ஹிக்ஸ் தெரிவாகினார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<