இலங்கை கால்பந்து பயிற்றுவிப்பாளருக்கு எதிராக முகாமையாளர் பொலிஸில் முறைப்பாடு

408

இலங்கை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நிசாம் பகீர் அலியிடம் இருந்து பாதுகாப்புக் கோரி இலங்கை கால்பந்து அணி முகாமையாளர் சுனில் செனவீர, மிரிஹான பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். 

கடந்த ஜூலை 15 ஆம் திகதி இந்த முறைப்பாட்டை செய்திருப்பதாக உள்ளூர் பத்திரிகைகள் ஊடாக ThePapare.com இற்கு தெரியவருகிறது.

இந்த இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் ஒன்று இருந்து வருவது பல தடவைகள் இலங்கை கால்பந்து சம்மேளன நிர்வாகத்தின் அவதானத்தை பெற்றுள்ளது. எனினும் இதுபற்றி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

பிரியாவிடை போட்டியொன்றை தர மறுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தேன் – மாலிங்க

உபாதை காரணமாக இலங்கை அணியில் இருந்து புறக்கணிப்பட்டதால் பிரியாவிடை…

பகீர் அலி பல சந்தர்ப்பங்களில் தன் மீது முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும் வார்த்தைகளால் தூற்றியதாகவும் தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் செனவீர குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு தேசிய குழாமில் தனது பணியை முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவதானத்தை பெறுவதற்கு தனக்கு தொடர்பில்லாத விடயங்களிலும் தலைமை பயிற்சியாளர் தலையிடுவதாகவும் அவர் முறையிட்டுள்ளார். 

தனது தனிப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் ஒன்றுக்குப் பின் பெத்தகான கால்பந்து பயிற்சி மையத்திற்கு திரும்பிய செனவீரவிடம் பகீர் அலி வார்த்தைகளால் தூற்றியிருப்பதோடு, முகாமையாளரை கண்டித்ததை அடுத்தே புதிதாக மீண்டும் முறுகல் வெடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த இருவரும் பல சுற்றுப்பயணங்களில் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் முகாமையாளராக ஒன்றாக செயற்பட்டுள்ளனர். 

அண்மையில் ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு, தேசிய அணிக்கு பெறுமதியான பயிற்சி உபகரணங்களை வழங்கியதோடு, அதனை பயன்படுத்துவது தொடர்பில் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை மற்றும் முந்தைய பிரச்சினைகள் பற்றி இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு தெரிந்திருந்தபோதும் இதுவரை அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இலங்கை தனது 8 போட்டிகளில் முதலாவது ஆட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதி பங்கேற்கவிருக்கும் நிலையில் இலங்கை கால்பந்து சம்மேளனம் இந்தப் பிரச்சினையை உடன் தீர்க்க வேண்டி உள்ளது.  

இதுபற்றி கேட்டறிவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் நிசாம் பகீர் அலியை ThePapare.com தொடர்புகொண்டபோதும் இதுவரை உத்தியோகபூர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்படவில்லை.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<