இலங்கை கனிஷ்ட அணிக்கு அதிர்ச்சி கொடுத்த அவுஸ்திரேலியா

1791
Disappointed SL U19 Batsman
 

சுற்றுலா இலங்கை கனிஷ்ட அணி மற்றும் அவுஸ்திரேலியா கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான முதலாவது இளையோர் ஒரு நாள் போட்டியில், சிறந்த பந்து வீச்சினை வெளிக்காட்டிய அவுஸ்திரேலிய தரப்பு 160 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

பிரவீன் ஜயவிக்ரம மற்றும் கமிந்து மென்டிஸ்சின் இறுதி நேர அதிரடியால் போட்டி சமநிலையில்

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கனிஷ்ட அணி, அந்நாட்டு கனிஷ்ட அணியுடன் மூன்று நாட்கள் கொண்ட ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கும் நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஹோபர்ட் நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியினைக் கைப்பற்றியிருந்த இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலியாவிற்கு வழங்கியிருந்தார்.

இதன்படி துடுப்பாட்டத்திற்கு சாதமான மைதானத்தில் களமிறங்கியிருந்த அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி நல்லதொரு ஆரம்பத்தினைப் பெற்றிருந்தது. அவ்வணியின் முதல் விக்கெட்டினை பி டி எஸ் குலரத்ன கல்லூரியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நிப்புன் ரன்சிக்க வீழ்த்தியிருந்தார். இதனால் அதிரடி காட்டியிருந்த மேக்ஸ் பிரைன்ட் 25 பந்துகளிற்கு 6 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்த அவுஸ்திரேலிய அணி மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கியிருந்த அணியின் துணைத் தலைவர் பாரம் உப்பாலின் நேர்த்தியான துடுப்பாட்டத்தினால் பெற்ற அரைச் சதம் மூலம் ஒரு வலுவான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

அவுஸ்திரேலிய இளம் அணியின்  நான்காம் விக்கெட்டினை தொடர்ந்து, பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியிருந்த இலங்கை தரப்பு, எதிரணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தினை முழுமையாக சிதைத்தது. மத்திய வரிசை வீரர்களில் ஒருவரேனும் கூட பத்து ஓட்டங்களினையும் தாண்டியிருக்கவில்லை.

நடப்புச் சம்பியனை வீழ்திய மும்பை இந்தியன்ஸ் அணி

எனினும், முன்னர் அரைச்சதம் கடந்திருந்த வலது கை துடுப்பாட்ட வீரரான உப்பால், தனியொருவராக தனது அணிக்காக போராடி பெற்ற சதத்தினால், இன்னிங்ஸ் முடிவில் 50 ஓவர்களிற்கு 9 விக்கெட்டுக்களை இழந்த அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 265 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

இதில் அவ்வணியின் 8ஆம் விக்கெட்டாக ஓய்வறை திரும்பியிருந்த பாரம் உப்பால் 119 பந்துகளினை எதிர்கொண்டு மொத்தமாக 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 111 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அத்துடன் மற்றைய ஆரம்ப வீரராக வந்திருந்த ஜேக் எட்வர்ட்ஸ் மொத்தமாக 45 ஓட்டங்களை 7 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக பெற்றிருந்தார்.

இலங்கை கனிஷ்ட அணியின் பந்து வீச்சில், நிப்புன் ரன்சிக்க 3 விக்கெட்டுக்களையும் திரித்துவ கல்லூரியின் சகல துறை வீரர் ஹசித்த பொயாகொட 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

இதனை அடுத்து சற்று சவாலான வெற்றியிலக்கான 266 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு மைதானம் விரைந்த இலங்கை இளம் வீரர்கள் ஒரு பிரகாசமான ஆரம்பத்தினை வழங்கத் தவறினர்.

அவுஸ்திரேலிய தரப்பின் ஸேக் ஈவான்ஸ், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லஹிரு குருஸ்புள்ள மற்றும் விஷ்வ சத்துரங்க ஆகியோரை தான் வீசிய இந்த இன்னிங்சின் மூன்றாவது ஓவரில் வீழ்த்தி ஆரம்ப வீரர்களின் பிரகாசத்தினை மங்கச் செய்தார்.

இதனால், அழுத்தத்திற்கு உள்ளாகிய இலங்கை கனிஷ்ட அணியின் பலவீனத்தை பயன்படுத்திய அவுஸ்திரேலியா, ஏனைய இலங்கை வீரர்களையும் சிறப்பாக செயற்பட்டிருந்த தமது களத்தடுப்பின் மூலம் விரைவான முறையில் ஓய்வறை நோக்கி அனுப்பியது.

எதிரணி பந்து வீச்சினை சமாளிப்பதில் தடுமாற்றம் கொண்டிருந்த இலங்கை கனிஷ்ட அணியில் எந்தவொரு வீரரும் முப்பது ஓட்டங்களை கூட தொடவில்லை.

பயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா

முடிவில், 33.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை கனிஷ்ட அணி, 105 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.

இலங்கை கனிஷ்ட அணியின் சார்பாக அதிகபட்சமாக புனித ஜோசப் கல்லூரி வீரர் நிப்புன சுமனசிங்க 29 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

அவுஸ்திரேலிய தரப்பு பந்து வீச்சில் ஸேக் ஈவான்ஸ் மொத்தமாக 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அத்துடன் லொய்ட் போப்பும் 3 விக்கெட்டுக்களை சாய்த்து தனது தாயக்கத்தின் வெற்றியினை உறுதிப்படுத்தியிருந்தார்.

இப்போட்டியின் வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒரு நாள் தொடரில் அவுஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக, இன்றைய போட்டியில் சதம் விளாசிய பாரம் உப்பால் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி – 265/9 (50) பாரம்உப்பால் 111(119), ஜேக் எட்வர்ட்ஸ் 45(40), மேக்ஸ்பிரைன்ட் 34(25), ஜேசன் சங்கா  31(57), நிப்புன்ரன்சிக்க 60/3(10), ஹஸித்த பொயாகொட35/2(10)

இலங்கை கனிஷ்ட அணி – 105 (33.2) நிப்புனசுமனசிங்க 29(52)நிப்புன் ரன்சிக்க 17(15), ஸேக்ஈவான்ஸ் 22/4 (10), லொய்ட் போப் 21/3 (9.2), வில்சுத்தர்லேன்ட் 29/2(6)

போட்டி முடிவு – அவுஸ்திரேலிய னிஷ்ட 160ஓட்டங்களால் வெற்றி