பிரவீன் ஜயவிக்ரம மற்றும் கமிந்து மென்டிஸ்சின் இறுதி நேர அதிரடியால் போட்டி சமநிலையில்

990
SL U19 vs AUS U19

அவுஸ்திரேலியா ஹோபர்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட அவுஸ்திரலிய மற்றும் இலங்கை கனிஷ்ட அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி மூன்றாவதும் இறுதியுமான நாளாக இன்று பெரும் விறுவிறுப்புக்கு மத்தியில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இரண்டாம் நாளான நேற்றைய தினம் அதிஷ்டவசமாக மழை காரணமாக  ஆட்டம் இடைநிறுத்தப்படும் பொழுது இலங்கை கனிஷ்ட அணி 44 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த வகையில் 160 ஓட்டங்களால் பின்னுற்ற நிலையில் இருந்த இலங்கை கனிஷ்ட அணி, இறுதி நாளான இன்று துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.

இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கியிருந்த துடுப்பாட்ட வீரர் நிபுன் ரன்சிக்க 9 ஓவர்கள் வரை துடுப்பாடி 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேவேளை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 184 ஓட்டங்களுக்கு உயர்த்தினார். இறுதியில்  சாக் எவன்ஸின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார். அத்துடன் சிறப்பாக பந்து வீசிய சாக் எவன்ஸ் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து 119 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி சார்பாக இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மெத் ஸ்பூர்ஷ் மற்றும் ரியான் ஹக்னி முதல் விக்கெட்டுக்காக 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று கொண்ட அதேவேளை சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். எனினும், முதல் இன்னிங்சில் சதம் பெற்றுக்கொண்ட ஜெக் எட்வர்ட்ஸ் மற்றும்  ஜொனதன் மெர்லோ உள்ளடங்கலாக ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும் அணித் தலைவர் 23 ஓட்டங்களை பெற்று ஓட்டங்களை உயர்த்தினார்.

அதேவேளை, அதிரடியாக ஓட்டங்களை குவிக்க முற்பட்ட அவுஸ்திரேலிய அணியை தனது சுழல் பந்து வீச்சால் கட்டுப்படுத்திய பிரவீன் ஜயவிக்ரம 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். எனினும், 268 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக்கொண்ட நிலையில், 30 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ஓட்டங்களுடன் இரண்டாம் இன்னிங்சை நிறுத்திக்கொண்டது.

அந்த வகையில், வெற்றிக்காக 268 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் களமிறங்கிய இலங்கை கனிஷ்ட அணி இன்றைய நாள் ஆட்ட நிறைவின் போது  56 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை கனிஷ்ட அணி சிறப்பாக துடுப்பாடியிருந்தது. அதிக பட்ச ஓட்டங்களாக அணித் தலைவர் கமிந்து மென்டிஸ் 41 ஓட்டங்களை பதிவு செய்தார். அத்துடன், தோல்வியை தவிர்த்துக்கொள்ள இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிபுன் சுமனசிங்க 31 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இப்போட்டி சமநிலையுற்ற நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் போட்டியில் இதே மைதானத்தில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி (முதல் இன்னிங்ஸ்) – 309/6d (79.3) – ஜெக் எட்வர்ட்ஸ் 106, ஜொனதன் மெர்லோ 100*, ஜேசன் சங்கா 41, ரயான் ஹன்கே 17, நிப்புன ரன்சிக்க 46/3

இலங்கை கனிஷ்ட அணி (முதல் இன்னிங்ஸ்) – 184 (51.4) – லசித் குருஸ்புள்ளே 14, விஷ்வ சதுரங்க  39, கிரிஷான் ஆராச்சிகே 22, ஜெஹான் டேனியல் 17, நிபுன் சுமனசிங்க 16, ஹசித போயகொட 10, சாக் எவன்ஸ் 4/61, லோயிட் போப் 2/21, வில் சதர்லேன்ட் 2/20

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 142/8d (30) – மெத் ஸ்பூர்ஷ் 33, ரயான் ஹன்கே 27, வில் சதர்லேன்ட் 23, பிரவீன் ஜயவிக்ரம 6/40

இலங்கை கனிஷ்ட அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 201/7 (56) – லசித் குருஸ்புள்ளே 24, கமிந்து மென்டிஸ் 41, கே. சஞ்சுல 20, ஹசித போயகொட 18, ஆர் . ஹாட்லி 4/41, வில் சதர்லேன்ட் 1/34, ஐ . கார்லையில் 1/16