தலைவர் வழிநடத்த இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி வெற்றி

474
Avishka

தலைவர் அவிஷ்க பெர்னான்டோ முன்னின்று வழிநடத்த இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியை டக்குவத் லூவிஸ் முறை மூலம் இரண்டாவது ஒரு நாள் போட்டியை 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எனினும் இரண்டாவது ஓவரில் வில்லியம் செனிடினின் பந்து வீச்சுக்கு பத்தும் நிசங்க 4 ஓட்டங்களைப் பெற்று இருக்கும் போது ஆட்டமிழந்தார். தொடர்ந்து விஷ்வ சதுரங்கவும் 20 ஓட்டங்கள் பெற்ற நிலையில் செனிடினின் பந்து வீச்சுக்கு ஜெஸ்ஸி கிறிஸ்டென்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அவரது பாடசாலையைச் சேர்ந்த மிஷென் சில்வா சேர்ந்து இலங்கை அணியை ஒரு சிறந்த நிலைக்கு அழைத்துச் சென்றபோதும், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜேட் டி கிளார்க் சிறப்பாகப் பந்துவீசி சில்வா மற்றும் உபதலைவர் சம்மு அஷானை தொடர்ந்து ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இலங்கை அணி 73 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த அஷேன் பண்டார, தலைவர் அவிஷ்கவோடு இணைந்து 5ஆவது விக்கட்டுக்காக 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர். நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய அஷென் பண்டார 60 பந்துகளுக்கு 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

விக்கட் காப்பாளர் நவிந்து நிர்மளுடன் இணைந்த அவிஷ்க பந்துகளை வீணாக்காமல் 6ஆவது விக்கட்டுக்காக 51 ஓட்டங்களை 51 பந்துகளில்  பெற இலங்கை சற்று வலுவடைந்த நிலைமைக்கு முன்னேறியது. எனினும் மிட் விக்கட் திசையில் சிறப்பான பிடியின் மூலம் அவிஷ்கவை ஆட்டமிழக்க செய்தார் அகோனா மயோகா. தலைவர் அவிஷ்க பெர்னாண்டோ 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்களாக 115 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து 26 ஓட்டங்களைப் பெற்ற நிர்மலை, மல்டர் ஆட்டமிழக்கச் செய்ய இலங்கை அணி 50ஆவது ஓவரில் 209 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

210 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியினால் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சிறப்பாகப் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் மிஷென் சில்வா, ரிக்கார்டோ கொன்செலோஸ் மற்றும் ரெனார்ட் வான் ஆகிய இருவரையும் குறுகிய ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களை ஆரம்பத்திலேயே களமிறக்கிய இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு ஓட்டங்களைக் குவிக்கவிடாமல் நெருக்கடி கொடுத்தது. இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களான தமித்த சில்வா மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம தமக்கு நியமிக்கப்பட்ட 10 ஓவர்களையும் நிறைவு செய்து முறையே 42 மற்றும் 27 ஓட்டங்களைக் கொடுத்து தலா 1 விக்கட்டைப் பெற்றுக்கொண்டனர்.

தனது முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடும் இசிபதன கல்லூரியின் அயன சிறிவர்தன 2 விக்கட்டுகளைப் பெற்று இலங்கை அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தார். 140 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்து காணப்பட்ட தென்னாபிரிக்க அணிக்கு கெனான் ஸ்மித் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து நம்பிக்கை கொடுத்த போதும் மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்படும் போது ஸ்மித் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மழை குறுக்கிட்டதன் காரணமாக இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி டக்குவத் லூவிஸ் முறை மூலம் 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. முன்னைய போட்டியில் தென்னாபிரிக்க 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி புதன்கிழமை பி சாரா ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இலங்கை அணி  – 209(49.2) : அவிஷ்க பெர்னாண்டோ 97, விஷ்வ சதுரங்க 20, நிர்மல் 26, அஷென்  பண்டார 24, செனிடின் 3/46, முல்டர் 2/39, டேனியல் மோரியார்டி 2/46, கிளார்க் 2/23

தென் ஆபிரிக்கா அணி : 184/8(47.4): முல்டர் 41, கேனான் ஸ்மித் 46*, ஜெஸ்ஸி கிறிஸ்டென்சன் 35, சிறிவர்த்தன 2/22, சில்வா 2/8

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்