நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான இளையோர் ஒரு நாள் தொடரின் விறுவிறுப்பான இரண்டாவது போட்டியில் கட்டுப்படுத்தும் வகையிலான பந்து வீச்சினை வெளிக்காண்பித்த இலங்கை கனிஷ்ட அணி 8 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பெற்றுள்ளது.  

இலங்கை கனிஷ்ட அணிக்கு அதிர்ச்சி கொடுத்த அவுஸ்திரேலியா

இவ்வெற்றியுடன், இலங்கை தரப்பு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

இத்தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் படுதோல்வியடைந்திருந்த இலங்கை கனிஷ்ட அணி, தொடரினை சமப்படுத்தும் கனவுகளுடன் இப்போட்டியில் களமிறங்கியிருந்தது.

ஹொபர்ட் நகரில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியினை தமதாக்கியிருந்த இலங்கை இளம் வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து மைதானத்திற்குள் பிரவேசித்திருந்தனர்.

இலங்கை கனிஷ்ட அணியின் ஆரம்ப வீரர்கள் நல்ல தொடக்கத்தினை தந்திருந்தனர். முதல் விக்கெட்டாக லஹிரு குருஸ்புள்ள (10) ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, நான்காம் விக்கெட் வரை இலங்கை கனிஷ்ட அணியின் ஓட்டங்களை உயர்த்துவதில் நிப்புன சுமனசிங்க பெரும் பங்காற்றியிருந்தார். பாரம் உப்பாலின் பந்து வீச்சில் வீழ்ந்த சுமனசிங்க மொத்தமாக தனது அணிக்கு 42 ஓட்டங்களினைப் பெற்றுத்தந்தார்.

இவரின் விக்கெட்டினை அடுத்து ஓட்டக்குவிப்பில் சற்று பிறழ்வு நிலையினை இலங்கை கனிஷ்ட அணியின் மத்திய வரிசை வெளிக்காட்டியிருந்தது. எனினும், களத்தில் நின்ற அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜோசப் கல்லூரி வீரர் ஜெஹான் டேனியல் ஆகியோர் பெற்றுக்கொண்ட பெறுமதி வாய்ந்த ஓட்டக்குவிப்புக்கள் மூலம் முடிவில், 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை கனிஷ்ட அணி 222 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில்,  மெண்டிஸ்  3 பவுண்டரிகளுடன்  31 ஓட்டங்களினையும் ஜெஹான் டேனியல் 32 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர்.

அவுஸ்திரேலிய இளம் அணியின் பந்து வீச்சில், சுழல் வீரரான லொய்ட் போப் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்ததுடன் அவுஸ்டின் வோக், வில் சுத்தர்லேன்ட் மற்றும் பாரம் உப்பால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 223 ஓட்டங்களினைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் ஆரம்ப வீரர்கள் இருவரினையும், அவ்வணி 10 ஓட்டங்களினை தாண்டுவதற்குள் இலங்கை தரப்பு வீழ்த்தியது.

எனினும், களத்தில் நின்ற அணித் தலைவர் ஜேசன் சங்கா மற்றும்  பாரம் உப்பால் ஆகியோர் மூன்றாம் விக்கெட்டுக்காக சிறப்பான இணைப்பாட்டம் (65) ஒன்றினைப் பெற்று தமது அணியினை வெற்றிக்கோட்டை தொடுவதற்காக கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பந்து வீசும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹரீன் வீரசிங்க அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் தலைவர் சங்காவினை ஓய்வறை நோக்கித் திருப்பியதுடன் வலுவான இணைப்பாட்டத்தினையும் தகர்த்தெறிந்தார்.

இதனையடுத்து அரைச் சதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த பாரம் உப்பாலினை  இருகைகளினாலும் பந்து வீசும் ஆற்றல் கொண்ட இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதன் காரணமாக போட்டியின் வெற்றி வாய்ப்பு இலங்கை அணிக்கு சாதகமாக மாறியது. எனினும், மத்திய வரிசையில் களமிறங்கியிருந்த சுத்தர்லேன்ட் மற்றும் அவுஸ்ட்டின் வோக் ஆகியோர்  நிதானமாக ஆடிபோட்டியின் வெற்றியினை அவர்களின் தாயகம் பக்கம் திருப்பியிருந்தனர்.

இதில் செபஸ்டியன் கல்லூரி வீரர் பிரவின் ஜயவிக்ரமவினால் வோக்கின் ஆட்டம் 33 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டதுடன், அதிரடியாக அரைச் சதத்துடன் ஆடியிருந்த சுத்தர் லேன்ட்டும் நிப்புன் ரன்சிக்கினால் போல்ட் செய்யப்பட்டிருந்தார்.  

இலங்கை அணியின் ஸ்கொட்லாந்து சுற்றுப்பயணம் எதற்காக?

அணியின் வெற்றிக்காக பாடுபட்டிருந்த இவர்கள் இருவரும் ஓய்வறை திரும்ப போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில் கச்சிதமான முறையில் களத்தடுப்பினை மேற்கொண்டிருந்த இலங்கை இளம் வீரர்கள் இரண்டு ரன் அவுட்களை மேற்கொண்டு போட்டியினை இன்னும் விறுப்பாக்கியிருந்தனர்.

முடிவில், இலங்கை கனிஷ்ட அணி வெற்றி பெற ஒரு விக்கெட் தேவையான நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது.

சிறப்பாக செயற்பட்டிருந்த ஜெஹான் டேனியல் அவுஸ்திரேலிய அணியின் இறுதி விக்கெட்டினை சாய்த்து போட்டியின் வெற்றியாளர்களாக இலங்கையினை மாற்றிருந்தார்.

முடிவில் 49.2 ஓவர்களில் 214 ஓட்டங்களினை  மாத்திரமே பெற்றிருந்த அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி இப்போட்டியில் தோல்வியினை தழுவிக்கொண்டது.

அவுஸ்த்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் இலங்கைக்கு அழுத்தம் தந்திருந்த சுத்தர்லேன்ட் மொத்தமாக 49 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இலங்கை கனிஷ்ட அணியின் பந்து வீச்சில் நிப்புன் ரன்சிக்க இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்து சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கனிஷ்ட அணி – 222 (47.2) நிப்புன சுமனசிங்க 42, ஜெஹான் டேனியல் 32, கமிந்து மெண்டிஸ் 31, விஷ்வ சத்துரங்க 27, லொய்ட் போப் 3/51, அவுஸ்டின் வோக் 2/27, பாரம் உப்பால் 2/29,  வில் சுத்தர்லேன்ட் 2/48

அவுஸ்த்திரேலிய கனிஷ்ட அணி – 214 (49.2) பாரம் உப்பால் 55, வில் சுத்தர்லேன்ட் 54, அவுஸ்டின் வோக் 33, நிப்புன் ரன்சிக்க 2/42

போட்டி முடிவு இலங்கை கனிஷ்ட அணி 8 ஓட்டங்களால் வெற்றி

இரு அணிகளும் மோதும் இளையோர் ஒரு நாள் தொடரின் மூன்றாம் போட்டி இதே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெறவுள்ளது.