சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் (U19) கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில், இங்கிலாந்து இளம் கிரிக்கெட் அணி தமது துடுப்பாட்டவீரர்களின் அபார ஆட்டத்துடன் வலுப் பெற்றிருக்கின்றது.
ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இந்தியா
இரு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றிருக்க, இரண்டாவது டெஸ்ட் டேர்பி நகரில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பமாகியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் இளம் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து இளம் அணி, ஒரு கட்டத்தில் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
இதில் அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த அணித்தலைவர் வந்த பென் மெக்கினி 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் சதம் விளாசிய ரோஸ் விட்பீல்ட் வெறும் 02 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். இதேநேரம் நான்காம் இலக்க துடுப்பாட்டவீரரான ஜேம்ஸ் ரீவ் 09 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார்.
எனினும் அணியின் நான்காம் விக்கெட்டுக்காக கைகோர்த்த ஆரம்ப வீரர் ஹர்ரி சிங் மற்றும் மெதிவ் ஹேர்ஸ்ட் ஆகியோர் பொறுப்பான முறையில் ஆடி ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியதோடு, நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக சிறந்த முறையில் 202 ஓட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த இணைப்பாட்டத்திற்குள் சதம் பூர்த்தி செய்த மெதிவ் ஹேர்ஸ்ட் இங்கிலாந்து அணியின் நான்காம் விக்கெட்டாக மாறிய போது 11 பௌண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இங்கிலாந்திற்கு எதிராக இலங்கை இளையோர் அசத்தல் வெற்றி
இவரோடு ஏனைய வீரரான ஹர்ரி சிங்கும் சதத்தினை நெருங்கிய நிலையில் முதல் நாளின் ஆட்ட நேரம் நிறைவுக்கு வந்தது. இதன்படி போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் இங்கிலாந்து U19 கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. களத்தில் நிற்கும் ஹர்ரி சிங் 98 ஓட்டங்களுடனும், புதிய வீரராக களம் வந்த பேர்டி போர்மன் 2 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
இலங்கை இளம் அணிப் பந்துவீச்சில் வனுஜ சஹான் 2 விக்கெட்டுக்களையும், சஹான் மிஹிர மற்றும் துவின்து ரணதுங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (29) தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<