சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (3) நிறைவுக்கு வந்திருக்கின்றது.
சுற்றுலா இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் 19 வயதுக்கு …
அதன்படி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி போட்டியின் ஆதிக்கத்தினை தொடர்ந்தும் தக்க வைத்திருக்கின்றது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் ஒரு அங்கமாக நடைபெறுகின்ற நான்கு நாட்கள் கொண்ட இந்த இளையோர் டெஸ்ட் போட்டி நேற்று (2) குல்னா நகரில் ஆரம்பமானது.
போட்டியில் நேற்று முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 184 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்ஸினை நிறைவு செய்தது. பின்னர், பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
அதன் பின்னர் இன்று இலங்கையின் இளம் வீரர்களை விட 113 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக அதன் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினர்.
அதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த பிரன்தீக் நவ்ரோஸ் நபில் 181 பந்துகளுக்கு 15 பௌண்டரிகள் அடங்கலாக 98 ஓட்டங்களை குவித்தார். பிரன்தீக் தவிர அல்வி ஹொக் மற்றும் சஹாதத் ஹொசைன் ஆகியோரும் திறமையினை வெளிப்படுத்தி அரைச்சதம் பெற்றனர். இந்த வீரர்களில் அல்வி ஹொக் 72 ஓட்டங்கள் எடுக்க, சஹாதத் ஹொசைன் 50 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
தொடர்ந்து இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 112 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸில் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் நிப்புன் தனன்ஞய, சமிந்து விக்ரமசிங்க மற்றும் துனித் வெல்லால்கே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.