மலேஷியாவில் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை கனிஷ்ட அணி இன்று மலேஷியா நோக்கிப் பயணமாகியது.
இறுதியாக பங்களாதேஷில் நடைபெற்ற ஐ.சி.சியின் இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியின் தலைவராகவும், அதே அணியில் இடம்பெற்றிருந்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் ஜெஹான் டேனியல் உப தலைவராகவும் செயற்படவுள்ளனர்.
அத்துடன் 7 புதுமுக வீரர்களுடன் இம்முறைப் போட்டித் தொடரில் களமிறங்கவுள்ள இலங்கை அணியில் 7 துடுப்பாட்ட வீரர்களும், 2 சகலதுறை வீரர்களும், 3 வேகப் பந்துவீச்சாளர்களும், 2 சுழல் பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் சொந்த மண்ணில் சம்பியனாகும் வாய்ப்பை இழந்த இலங்கை அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்கும் குறிக்கோளுடன் இம்முறைப் போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் தெரிவித்தார்.
எட்டு நாடுகள் பங்குபற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை வீரர்களினால் தொடரும் சில்லெட் சிக்ஸர்ஸ் அணியின் வெற்றியோட்டம்
உபுல் தரங்க மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரின் அதிரடியோடு சில்லெட்..
கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற இளையோர் ஆசிய கிண்ணத்தில் நாங்கள் 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டோம். அதன் பிறகு தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் விளையாடிய அனுபவம் கொண்ட சில வீரர்கள் அணியில் இடம்பெற்றிருப்பது எனக்கும் அணிக்கும் பக்கபலமாக அமையவுள்ளது. அதனைத் தொடர்ந்து எங்களுக்கு 3 மாதகால பயிற்சியும் வழங்கப்பட்டது. அது எங்களுக்கு மிகுந்த பயனைக் கொடுத்தது. கடந்த முறை விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு இம்முறை ஆசிய கிண்ணத்தை வெல்வதற்கு கடுமையாக முயற்சிப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பலமிக்க அணிகளாக இருந்தாலும், எமது அணியும் சமபலம் கொண்ட அணியாக இம்முறை போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இளையோர் உலகக் கிண்ணத்துக்கான ஆடுகளங்களை விட மலேஷியாவில் உள்ள ஆடுகளங்கள் இலங்கைக்கு ஒப்பானதாக உள்ளது. அதனைக் கருத்திற் கொண்டு வீரர்கள் தெரிவு இடம்பெற்றதாக 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ரோய் டயஸ் தெரிவித்தார்.
இதேவேளை 19 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்கள் இலங்கையின் வருங்கால நட்சத்திரங்கள் எனக் குறிப்பிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, தேசிய அணிக்கு வழங்கிய சகல வசதிகளையும் கனிஷ்ட அணிக்கு வழங்கியுள்ளதாகவும் அவர்கள் திறமையை வெளிப்படுத்தி நாட்டிற்கு பெருமையைப் பெற்றுக் கொடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் கூறினார்.
ஒரே போட்டியில் 2 ஹெட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றி ஸ்டார்க் புதிய சாதனை
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது..
19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் போட்டியை நடாத்தும் நாடான மலேஷியா ஆகிய நாடுகள் குழு ‘A’ இலும், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் குழு ‘B’ இலும் போட்டியிடுகின்றன.
19 வயதுக்கு உட்பட்ட இலங்கை குழாம்
கமிந்து மெண்டிஸ் (தலைவர் – காலி றிச்மண்ட் கல்லூரி), ஜெஹான் டேனியல் (உதவி தலைவர் – புனித ஜோசப் கல்லூரி), ஆஷேன் பண்டார (காலி புனித அலோசியஸ் கல்லூரி), தனஞ்சய லக்ஷான் (காலி றிச்மண்ட் கல்லூரி), நிஷான் முதுஷங்க (மொறட்டுவ மகா வித்தியாலயம்), நிப்புன தனஞ்சய (வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி), ஹிசித்த போயகொட (கண்டி திரித்துவக் கல்லூரி), கிரிஷான் சுஞ்சுல (கந்தானை டி மெசனொட் கல்லூரி), நவிந்து பெர்ணாண்டோ (மொறட்டுவ புனித செபஸ்தியார் கல்லூரி), ரந்திர் ரணசிங்க (குருநாகல் புனித ஆனாள் கல்லூரி), திசரு ரஷ்மிக்க (மாத்தறை புனித செர்வேஷஸ் கல்லூரி), ப்ரவீன் ஜயவிக்ரம (மொறட்டுவ புனித செபஸ்தியார் கல்லூரி),
போட்டி அட்டவணை
A பிரிவு போட்டிகள்
நவம்பர் – 10 இந்தியா எதிர் மலேஷியா
நவம்பர் – 11 பங்களாதேஷ் எதிர் நேபாளம்
நவம்பர் – 12 இந்தியா எதிர் நேபாளம்
நவம்பர் – 13 பங்களாதேஷ் எதிர் மலேஷியா
நவம்பர் – 14 நேபாளம் எதிர் மலேஷியா மற்றும் இந்தியா எதிர் பங்களாதேஷ்B பிரிவு போட்டிகள்
நவம்பர் – 10 பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான்
நவம்பர் – 10 இலங்கை எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
நவம்பர் – 11 இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்
நவம்பர் – 12 பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
நவம்பர் – 13 இலங்கை எதிர் பாகிஸ்தான்
நவம்பர் – 14 ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
நவம்பர் 16, 17 – அரையிறுதிப் போட்டிகள்
நவம்பர் 19 – இறுதிப் போட்டி






















