பெதும் நிஸ்ஸங்கவின் திறமையைக்கண்டு வியக்கும் மிக்கி ஆர்தர்!

Sri Lanka tour of West Indies 2021

1369

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான குழாத்தில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளார். 

பெதும் நிஸ்ஸங்கவின் திறமை தொடர்பில் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டுவந்த போதும், அவர் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காமை அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. எனினும், கடந்த சில மாதங்களாக பெதும் நிஸ்ஸங்க உபாதையில் இருந்த காரணத்தால், அவரால் போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்தது. 

இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராகும் லசித் மாலிங்க?

இவ்வாறான நிலையில், பெதும் நிஸ்ஸங்கவை முதன்முறையாக பார்த்த போது, அவரின் திறமை, தன்னை ஈர்த்திருந்ததாக இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I தொடருக்கு முன்னர் வழங்கிய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.   

பெதும் நிஸ்ஸங்கவின் திறமையில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நான் பார்வையிட்ட காலப்பகுதியில் அவருக்கு உபாதை ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர், கொவிட்-19 தொற்று ஏற்பட்டதால், கடந்த 8 மாதங்களாக எந்த வீரரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  

முதற்தடவை அவரை பார்த்த போது, அவரின் திறமை என்னை ஈர்த்திருந்தது. அவர் இலங்கை அணிக்காக அனைத்துவகை போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரராக இருப்பார். அவர், மிகவும் சிறந்த இளம் திறமையாளர் என்றார்.

அதேநேரம், இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள மற்றுமொரு புதுமுக வீரரான அஷேன் பண்டாரவையும் மிக்கி ஆர்தர் புகழந்துள்ளார். எமது பயிற்சியின் போது, அஷேன் பண்டார துடுப்பாட்டத்தில் மிகவும் துடிப்பாகவும், களத்தடுப்பில் அற்புதமாகவும் செயற்பட்டார்.  

எனவே, பெதும் நிஸ்ஸங்க மற்றும் அஷேன் பண்டார போன்ற வீரர்கள் அணிக்குள் இணைக்கப்படுவார்களாயின் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன், அஷேன் பண்டாரவால் வேகமாக துடுப்பெடுத்தாட முடியும்., இடதுகை சுழல் பந்துவீச்சாளராகவும் செயற்பட முடியும். எனவே, அவரால் இங்கு ஓவர்களையும் வீசமுடியும். அதனால், அஷேன் பண்டாரவை பார்த்து உற்சாகமடைகிறேன்என மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை குசல் பெரேரா, இசுரு உதான, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தனன்ஜய டி சில்வா போன்ற வீரர்கள் குழாத்தில் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் முன்வந்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதுடன், அடுத்துவரும் T20I உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பிடிக்க வேண்டும் எனவும் மிக்கி குறிப்பிட்டார். 

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நாளை (04) அதிகாலை (03.00 மணிக்கு) ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…