மே.தீவுகளுக்கெதிரான தொடரை ஒத்திவைத்த இலங்கை!

Sri Lanka tour of West Indies 2021

241

இலங்கை கிரிக்கெட் அணியின், மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியானது, இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 T20I போட்டிகளில் விளையாடுவதற்காக எதிர்வரும், 20ம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகிவந்தது.

>>“எவ்வாறு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது என தெரியவில்லை” – ஆர்தர்<<

எனினும், இலங்கை வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 தொற்றுக்கான பி.சி.ஆர். (PCR) பரிசோதனையில், தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால், தொடரை ஒத்திவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

“நாம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்காக பயிற்சிகளை ஆரம்பித்திருந்தோம். எனினும் பயிற்றுவிப்பளார் மற்றும் திரிமான்ன ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது.  இதனால், பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதற்கு நாட்கள் தேவை. பயிற்சிகள் வழங்குவதற்கான காலம் குறைவாக உள்ளது.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளோம். அதனால், இம்மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எம்மால் செல்லமுடியாது” என சம்மி சில்வா மேலும் குறிப்பிட்டார்.

மேற்கிந்திய தீவுகளுக்கான தொடருக்காக, இலங்கை அணியின் 35 வீரர்கள் கொண்ட குழாம் பயிற்சிகளை மேற்கொண்டுவந்தது. துரதிஷ்டவசமாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதால், பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கிந்திய தீவுகளுக்கான தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் நடைபெறும் காலம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை பின்னர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்திருந்த இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2-0 என இழந்ததுடன், இறுதியாக சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 2-0 என இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<