இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ரயான் ரிக்கில்டனின் கன்னி சதத்தை விளாசியுள்ளதுடன், இலங்கை அணி 7 விக்கெட்டுகளை சாய்த்து பதில் கொடுத்து வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்திருந்ததுடன், 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் தெம்பா பௌவுமா மற்றும் ரயான் ரிக்கில்டன் ஆகியோர் இலங்கை அணிக்கு சவால் கொடுத்து, நேர்த்தியான இணைப்பாட்டமொன்றை பகிர்ந்தனர். இருவரும் மதியபோசன இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடினர்.
தொடர்ந்தும் இவர்களுடைய இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு சவால் கொடுத்ததுடன், இருவரும் தங்களுடைய அரைச்சதங்களை கடந்தனர். விக்கெட்டுகளுக்காக பல மாற்றங்களை செய்துக்கொண்டிருந்த இலங்கை அணிக்கு, அசித பெர்னாண்டோ தென்னாபிரிக்க அணித்தலைவர் தெம்பா பௌவுமாவின் (78 ஓட்டங்கள்) விக்கெட்டினை கைப்பற்றிக்கொடுத்தார்.
ரயான் ரிக்கில்டன் மற்றும் தெம்பா பௌமா ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பௌவுமா ஆட்டமிழந்த பின்னர் டேவிட் பெடிங்கம் 6 ஓட்டங்களுடன் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
எனினும் இதன் பின்னர் கெயல் வெரைனுடன் இணைந்து, ரயான் ரிக்கில்டன் மிகச்சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்தார். அதேநேரம் ரிக்கில்டன் தன்னுடைய கன்னி டெஸ்ட் சதத்தையும் பதிவுசெய்துக்கொண்டார்.
அதுமாத்திரமின்றி இன்றைய ஆட்டநேரத்தின் இறுதிக்கட்டம் வரை இவர்களுடைய இணைப்பாட்டம் தொடர்ந்த நிலையில், லஹிரு குமார வீசிய 86வது ஓவரில் ரிக்கில்டன் 101 ஓட்டங்களுடன் நிஸ்ஸங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல் நாளின் கடைசி ஓவரில் மார்கோ ஜென்சன் ஆட்டமிழக்க, தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. கெயல் வெரைன் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 100வது டெஸ்ட் விக்கெட்டையும் இன்றைய தினம் கைப்பற்றினார். இவரை தவிர்த்து அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.