“நாம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை” – குசல் பெரேரா

Sri Lanka tour of England 2021

102
 

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர் இன்று (23) ஆரம்பமாகவுள்ள நிலையில், தொடரில் மிகச்சிறந்த போட்டியொன்றை கொடுக்க முடியும் என இலங்கை அணியின் தலைவர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.

தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட குசல் பெரேரா, இலங்கை அணியை விட, இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும் என இதன்போது குறிப்பிட்டார்.

இரண்டு‌‌ ‌‌உலகக்‌‌ ‌‌கிண்ண‌‌ ‌‌தொடர்களை‌‌ ‌‌நடத்த‌‌ ‌‌இலங்கை‌ ‌தயார்‌ ‌ ‌

நாம் இப்போது இருக்கும் நிலையில் இல்லாமல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த தொடரில் ஏதாவதொன்றை நாம் உருவாக்க வேண்டும். ஆனால், இங்கிலாந்து அணிக்கு இல்லாமல் செல்லக்கூடிய விடயங்கள் உள்ளன. குறித்த அழுத்தம் இங்கிலாந்து அணிக்கு கட்டாயமாக இருக்கும். 

சிறந்த அணியுடன் விளையாடும் போது,  நம்பிக்கை அதிகரிக்கும். இப்போதுள்ள அணியில் நம்பிக்கை அதிகம். சரியான விடயங்களை செய்து போட்டியில் வெற்றிபெறுவதற்காகவே நாம் செல்கின்றோம். போட்டியில் வெற்றி தோல்வி இருக்கும். ஆனால், நாம் சிறந்த போட்டியொன்றை இங்கிலாந்து அணிக்கு கொடுக்க விரும்புகிறோம் என்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி மிகச்சிறந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியாக உள்ளது. எனினும், அந்த அணியில் உள்ள பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் உபாதை காரணமாக விலகியுள்ளனர். எனவே, சற்று பலம் குறைந்திருக்கும் இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்க முடியும் என குசல் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணியில் மாற்றங்களை ஏற்படுத்த அதிக வீரர்கள் உள்ளனர். துடுப்பாட்ட வரிசை மிகவும் பலமானது. எனினும், பந்துவீச்சாளர்களை பொருத்தவரை, நூற்றுக்கு நூறு வீதம் பலமானதாக இல்லை.  

குறிப்பாக அணியில் இருக்கும் முன்னணி வீரர்களுடன் பார்க்கும் போது, இந்த குழாத்தில் உள்ள வீரர்களில் சிறு குறைபாடு உள்ளது. எனினும், அவர்கள் சிறந்த வீரர்கள் இல்லை என கூறமுடியாது. இவர்கள், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளவர்கள்.

எனினும், இங்கிலாந்தின் முழு பலம் கொண்ட குழாத்துடன் ஒப்பிடும் போது சிறிய பலவீனம் ஒன்று உள்ளது. எனவே, அதனை நாம் சரியாக கணித்துக்கொள்ள வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர் இன்றைய தினம் (23) இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அடுத்த இரண்டு T20I போட்டிகளும் நாளை (24) மற்றும் 26ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…