சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது 192 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
சட்டோக்ரமில் நடைபெற்று முடிந்த இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 511 ஓட்டங்களை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணியானது 268 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த மெஹிதி ஹஸன் 44 ஓட்டங்களையும், தய்ஜூல் இஸ்லாம் 10 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பின்னர் இன்று (03) போட்டியின் ஐந்தாம் நாளில் பங்களாதேஷின் வெற்றிக்காக 243 ஓட்டங்கள் தேவைப்பட அவ்வணி தமது ஆட்டத்தினை தொடர்ந்தது. தொடர்ந்த ஆட்டத்தில் அணியின் முதல் விக்கெட்டாக கமிந்து மெண்டிஸின் பந்துவீச்சில் தய்ஜூல் இஸ்லாம் ஓய்வறை நோக்கி அனுப்பபட்டார். தய்ஜூல் இஸ்லாம் 14 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இதன் பின்னர் பங்களாதேஷ் அணியின் எஞ்சிய இரண்டு விக்கெட்டுக்களையும் லஹிரு குமார கைப்பற்ற பங்களாதேஷ் அணியானது 85 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களை எடுத்து போட்டியில் படு தோல்வி அடைந்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மெஹிதி ஹஸன் 14 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 81 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை பந்துவீச்சில் லஹிரு குமார 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுக்களையும் பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக மற்றும் தொடர் நாயகனாக இலங்கை அணி வீரரான கமிந்து மெண்டிஸ் தெரிவாகினார்.