பொதுநலவாய விளையாட்டு விழாவின் மகளிர் T20 கிரிக்கெட் தொடருக்குரிய எஞ்சிய அணியினை தெரிவு செய்ய நடைபெற்று முடிந்திருக்கும் தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் இன்று (24) பங்களாதேஷினை இலங்கை மகளிர் அணி 22 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.
>>மூன்றாவது தொடர் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
பங்களாதேஷிற்கு எதிரான வெற்றியுடன் 2022ஆம் ஆண்டுக்கான பர்மிங்கம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இடம்பெறும் மகளிர் T20 தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என முன்னணி அணிகளுடன் பங்கெடுக்கின்ற எட்டாவது அணியாகவும் இலங்கை மாறியிருக்கின்றது. அதோடு இது இலங்கை மகளிர் அணிக்கு இந்த தகுதிகாண் தொடரில் கிடைத்த நான்காவது தொடர் வெற்றியாகவும் அமைகின்றது.
ஐந்து அணிகள் பங்கெடுக்கின்ற இந்த தகுதிகாண் தொடரில் தமது முன்னைய போட்டிகளில் ஸ்கொட்லாந்து, கென்யா, மலேசியா என அனைத்து அணிகளையும் வீழ்த்தியிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று தீர்மானம் கொண்டதாக அமைந்த போட்டியில் பங்களாதேஷினை எதிர்கொண்டிருந்தது.
கோலாலம்பூரில் ஆரம்பித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் வீராங்கனைகள் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சமரி அத்தபத்து 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதோடு நிலக்ஷி சில்வா உம் 28 ஓட்டங்கள் பெற்று இலங்கை அணிக்கு பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் நஹிதா அக்தர் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 137 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் முர்சிதா கட்டுன் 36 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்கள் பெற்ற வீராங்கனையாக மாற, சமரி அத்தபத்து அதிரடியான முறையில் 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சினை உறுதி செய்திருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகி விருதும், இந்த தகுதிகாண் தொடருக்குரிய தொடர் நாயகி விருதும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்துவிற்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை மகளிர் – 136/6 (20) சமரி அத்தபத்து 48, நிலக்ஷி சில்வா 28, நஹிதா அக்தர் 34/2
பங்களாதேஷ் மகளிர் – 114/5 (20) முர்சிதா கட்டுன் 36, சமரி அத்தபத்து 3/17
முடிவு – இலங்கை மகளிர் 22 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
[insert_php] $contents = file_get_contents(“https://stats.thepapare.com/cricket/embed/match_result/sri-lanka-w-v-bangladesh-w”); echo $contents;[/insert_php]