CH & FC அணியின் சவாலை முறியடித்த கண்டி விளையாட்டுக் கழகம்

168

கழக அணிகளுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின் 11ஆம் வாரத்திற்கான மூன்று போட்டிகள் நேற்று இடம்பெற்றன. இப்போட்டிகளில் கண்டி விளையாட்டுக் கழகம், கடற்படை விளையாட்டுக் கழகம் மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழக அணிகள் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டன.

கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் CH&FC

சம்பியன் பட்டத்தை ஏறத்தாழ தக்கவைத்துக் கொண்ட கண்டி அணியானது, முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் CH&FC அணியை நித்தவளை மைதானத்தில் எதிர்கொண்டது.

ட்ரை மழை பொழிந்த கண்டி, கடற்படை விளையாட்டுக் கழகங்கள்

டயலொக் கழக ரக்பி லீக் தொடர் இறுதிக் கட்டத்தை அண்மித்து வரும் நிலையில்…

போட்டியின் முதல் ட்ரையினை கண்டி அணி வீரர் நைஜல் ரத்வத்த பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து CH&FC வீரர் செமுவல் மதுவந்த பெனால்டி உதை ஒன்றின் மூலம் புள்ளி வித்தியாசத்தை குறைத்தார்.

சில நிமிடங்களின் பின்னர் பாசில் மரிஜா அபார ஓட்டத்தின் பின்னர் ட்ரை ஒன்றை வைத்ததுடன், அதற்கு பதிலளிக்கும் வகையில் லீ கீகல் ட்ரை ஒன்றினை பெற்றுக் கொடுத்தார்.

இரு அணிகளும் சளைக்காது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட, போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றது. முதல் பாதியின் இறுதி வினாடிகளின் போது கண்டி அணியின் வீரர் ஸ்ரீநாத் சூரியபண்டார ட்ரை ஒன்றின் மூலம் தனது அணியை முன்னிலைக்கு இட்டுச் சென்றார்.

முதல் பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 19 – CH&FC 10

இடைவேளையின் பின்னர் முதல் ட்ரையினை CH&FC அணியானது ஹஷான் மதுரங்க ஊடாக பெற்றுக் கொண்டது. எனினும் எதிரணியை முன்னிலை பெற விடாது தடுத்த கண்டி அணியின் தலைவர் கயான் வீரரத்ன ட்ரை ஒன்றின் மூலம் மேலும் ஐந்து புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார்.

CH&FC அணியின் விங் நிலை வீரர் ஹஷான் மதுரங்க தனது இரண்டாவது ட்ரையினை பெற்று நம்பிக்கையளித்தார். அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் முறையே நைஜல் ரத்வத்த மற்றும் சேமுவல் மதுவந்த மூலமாக ஒவ்வொரு பெனால்டி உதைகளை வெற்றிகரமாக உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக் கொண்டன.

2018 பாடசாலைகள் ரக்பி போட்டி அட்டவணை வெளியீடு

இலங்கையின் மிகப்பெரிய பாடசாலை விளையாட்டு போட்டித் தொடரான…

வெறும் 6 புள்ளிகள் பின்னிலையில் காணப்பட்ட CH&FC அணி இறுதி நிமிடங்களில் கண்டி அணிக்கு பலத்த அழுத்தத்தை வழங்கியது. எனினும் அனுபவமிக்க வீரர் பாசில் மரிஜாவின் விவேகமான உதை ஒன்றை துரத்திப் பிடித்த ஒஷான் பெரேரா ட்ரை ஒன்றை வைத்து கண்டி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 34 – CH&FC 23

……………………………

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் CR&FC

வெலிசர மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் கடற்படை அணியானது தனுஷ்க பெரேராவின் ட்ரையுடன் போட்டியை ஆரம்பித்தது. போட்டியின் 25ஆவது நிமிடமளவில் இரு அணிகளும் முறையே திலின வீரசிங்க மற்றும் ரீசா ரபாய்டீன் மூலமாக பெனால்டி உதைகளை வெற்றிகரமாக உதைத்து புள்ளிகளை அதிகரித்துக் கொண்டன.

முதல் பாதி நிறைவடையும் தருவாயில் கடற்படை அணியானது திலின வீரசிங்க ஊடாக வலப்பக்க மூலையில் ட்ரை வைத்ததுடன் அவரது கொன்வெர்சன் உதையும் இலக்கை நோக்கி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடற்படை வீரர்கள் முதல் பாதியை 14 புள்ளிகள் முன்னிலையில் நிறைவு செய்தனர்.

முதல் பாதி: கடற்படை விளையாட்டுக் கழகம் 17 – CR&FC 03

இரண்டாம் பாதியை இரு அணிகளும் பெனால்டி உதைகளின் மூலம் ஆரமபித்தன. அதன் பின்னர் கடற்படையின் திலின வீரசிங்க தனது இரண்டாவது ட்ரையினை பெற்றுக் கொள்ள புள்ளி வித்தியாசம் இருபதாக அதிகரித்தது. எனினும் CR&FC வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு ட்ரைகளை வைத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தனர்.

விமானப்படையை வீழ்த்தி இரண்டாம் இடத்திற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட CH & FC

கழக அணிகளுக்கிடையிலான டயலொக் ரக்பி லீக் தொடரின் பத்தாம்…

எவ்வாறாயினும் இறுதி நிமிடத்தில் கடற்படையின் மாற்று வீரராக களமிறங்கிய துலாஞ்சன விஜேசிங்க ட்ரை ஒன்றை வைத்து தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அவ்வணியின் திலின வீரசிங்க இப்போட்டியில் தனது அனைத்து உதைகளையும் வெற்றிகரமாக உதைத்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: கடற்படை விளையாட்டுக் கழகம் 34 – CR & FC 18

…………………….

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

ரத்மலானையில் இடம்பெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் விமானப்படை சார்பில் லஹிரு உதயங்ககுமார, பபசர ஹேவகே மற்றும் இஷார மதுஷான் ஆகியோர் ட்ரைகளை பெற்றனர். இராணுவ அணியோ சுதார திக்கும்புற மூலமாக ஒரே ஒரு ட்ரையினை மாத்திரமே வைத்தது.

முதல் பாதி: விமானப்படை விளையாட்டுக் கழகம் 19 – இராணுவ விளையாட்டுக் கழகம் 05

இரண்டாம் பாதியில் ஆரம்பத்தில் விமானப்படையின் சுபுன் மதுஷங்க மற்றும் இராணுவ அணியின் ரொஷான் சம்பத் ஆகியோர் ட்ரைகளை பெற்று தத்தமது அணிகளுக்கு நம்பிக்கையளித்தனர்.

எனினும் விமானப்படை வீரர் கயந்த இத்தமல்கொட சிறப்பான ட்ரை ஒன்றினை வைத்து எதிரணியின் எதிர்பார்ப்புக்களை சிதறடித்தார். இறுதி நிமிடங்களில் இரு அணிகளும் புள்ளிகளை பெறாத நிலையில் விமானப்படை அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

முழு நேரம்: விமானப்படை விளையாட்டுக் கழகம் 33 – இராணுவ விளையாட்டுக் கழகம் 10