ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரின் இந்த வருடத்திற்கான போட்டிகள், இம்மாதம் 28ஆம், 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் (கொழும்புக் கிளை) ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளன.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த திருச்சபை ஊழியர்களில் ஒருவரான போற்றுதலுக்குரிய இயூஜின் ஹேர்பேர்ட் அடிகளார் மட்டக்களப்பு மாவட்டத்தின் கூடைப்பந்து விளையாட்டுக்கு ஆற்றிய சேவைகளை நினைவுகூறும் விதமாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இத்தொடரின் ஏழாவது பருவகாலப் போட்டிகளே இம்முறை இடம்பெறவுள்ளன.
ஹேர்பேர்ட் கிண்ண சம்பியனாக முடிசூடிய இலங்கை விமானப்படை
விறுவிறுப்புகளிற்கும், சுவாரஷ்யங்களிற்கும்…
இந்தப் பருவகாலத்திற்கான ஹேர்பேர்ட் கிண்ணம் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதின் கீழான கூடைப்பந்தாட்ட தொடராக அமையவுள்ளது. எனவே, இந்த ஆண்டு தொடரில் நாடுபூராகவும் கூடைப்பந்தாட்டத்திற்கு பிரபல்யமாக இருக்கும் பாடசாலைகள் பங்குபற்றுகின்றன.
தொடரின் போட்டிகள் அனைத்தும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து (ஹேர்பேர்ட்) அரங்கிலும், மியானி ஆண்கள் நகர கூடைப்பந்தாட்ட அரங்கிலும் இடம்பெறவுள்ளன.
ஹேர்பேர்ட் கிண்ணம் மற்றும் ஹேர்பேர்ட் அடிகள் பற்றி
“மீன் பாடும் தேன் நாடு” என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டம் கூடைப்பந்து விளையாட்டுக்கு மிகப் பிரபல்யமான ஒரு இடமாக காணப்படுகின்றதெனில் அதற்கு திருச்சபை ஊழியர் இயூஜின் அடிகளாரே முக்கிய காரணம் எனக் கூற முடியும்.
1954ஆம் ஆண்டு அமெரிக்காவில் மதகுருவாகி ஒரு வருடத்தின் பின்னர் இலங்கைக்கு வந்த இயூஜின் அடிகளார், இலங்கை வந்து 16 வருடங்களின் பின்னர் (1971ஆம் ஆண்டில்) திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் இருந்து, புனித மைக்கல் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் கூடைப்பந்து மீது இயூஜின் அடிகளுக்கு இருந்த மிகுந்த ஆர்வத்தினால் மட்டக்களப்பில், புனித மைக்கல் கல்லூரியின் கூடைபந்தாட்ட விளையாட்டுத்துறை அதிதுரித வளர்ச்சியினை அடைந்தது.
தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட தொடரில் புனித மைக்கல் கல்லூரிக்கு மூன்றாமிடம்
இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கம்…
13 தொடக்கம் 19 வரையிலான வயதுப்பிரிவு மாணவர்களுக்கு பயிற்றுவிப்புக்களை வழங்கத் தொடங்கிய இயூஜின் அடிகளார், பாடசாலைக் கூடைப்பந்து விளையாட்டின் பொற்காலமாக கருதப்பட்ட 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், புனித மைக்கல் கல்லூரி பல வெற்றிக்கேடயங்களை வெல்ல உதவினார்.
புனித மைக்கல் கல்லூரியானது தேசிய அளவிலான கனிஷ்ட சம்பியன்ஷிப் பட்டங்களை ஆறு தடவைகள் வெற்றியீட்டியுள்ளதோடு 1986ஆம், 1987ஆம் மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சம்பியனாகவும் தனது நாமத்தை பதிவு செய்திருக்கின்றது. இவ்வாறானதொரு சாதனையினை இலங்கையில் இதுவரை எந்த பாடசாலையினாலும் நெருங்கக்கூட முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல சாதனை அடைவுமட்டங்களை புனித மைக்கல் கல்லூரி பெற உதவிய அருட்தந்தை அவர்கள் பின்னர் வாழைச்சேனை பகுதியை அண்டிய இடத்தில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்றின் மூலம் 1990ஆம் ஆண்டில் காணாமல் போயிருந்தார். இதனால் புனித மைக்கல் கல்லூரி மட்டுமல்லாது இலங்கையின் முழு கூடைப்பந்தாட்ட துறையுமே பாரிய இழப்பு ஒன்றினை சந்தித்திருந்தது.
ஹேர்பேர்ட் அடிகளை நினைவு கூறும் விதமாக, புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் (கொழும்புக் கிளை) 2011ஆம் ஆண்டிலிருந்து இந்த கூடைப்பந்தாட்டத் தொடரை ஒழுங்கு செய்து இந்தப் பருவகாலம் வரை நடாத்தி வருகின்றனர். 2018ஆம் ஆண்டிற்கு முன்னர் இடம்பெற்ற ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்தாட்ட போட்டிகள் கழகங்கள் இடையிலான தொடராக அமைந்தது.
இதுவரை நடந்திருக்கும் தொடரின் ஆறு பருவகாலப் போட்டிகளில் தலா இரண்டு தடவைகள் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகமும், HSC ப்ளூஸ் அணியினரும் சம்பியன்களாக முடிசூடியுள்ளனர். கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகமானது 2012ஆம் ஆண்டில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் மீண்டும் 2016ஆம் ஆண்டு இலங்கை இராணுவப்படையினை வீழ்த்தி சம்பியன் ஆகியிருந்தது.
HSC ப்ளூஸ் அணியினர் 2013ஆம் மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இத்தொடரில் தொடர்ச்சியான சம்பியன்களாக முடிசூடியிருந்தனர். இந்த இரண்டு தடவைகளிலும் இலங்கை விமானப்படை அணியினரை வீழ்த்தியே அவ்வணி சம்பியனாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஏற்கனவே பங்கேற்ற மட்டக்களப்பு அணியானது, 2015ஆம் ஆண்டில் இணைந்த மாகாண பல்கலைக்கழக அணியினரை வீழ்த்தி ஒரு தடவை மாத்திரம் சம்பியனாக தெரிவாகியுள்ளது.
இறுதியாக 2017ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த இக் கூடைப்பந்தாட்ட தொடரில் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தினை முதல் தடவையாக சுவீகரித்திருந்தது. கடந்த ஆண்டு தொடரின் பெறுமதிமிக்க வீரராக விமானப்படையின் ரவி தொடங்கொடவும், சிறந்த தாக்குதல் வீரராக சுராஜ் பாலசூரியவும் தெரிவாகியிருந்தனர். இதேவேளை, இலங்கை இராணுவத்தின் திலான் சம்பத் கடந்த ஆண்டுக்கான சிறந்த தற்காப்பு வீரராக தெரிவாகியிருந்தார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இக் கூடைப்பந்தாட்ட தொடர், கிழக்கு மாகாணத்தில் உள்ள கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு நாடுபூராகவும் உள்ள சிறந்த அணிகளுடன் விளையாடும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தந்திருந்ததுடன், அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியிருந்தது.
இம்முறை ஹேர்பேர்ட் கிண்ண தொடர்
எனினும், கடந்த காலங்கள் போல் அல்லாது 2018ஆம் ஆண்டுக்கான இந்த கூடைப்பந்தாட்ட தொடர், ஹேர்பேர்ட் அடிகளாரின் காலத்தினைப் போன்று பாடசாலைகளை மையப்படுத்தியதாக இடம்பெறவுள்ளது.
அதோடு, எதிர்வரும் காலங்களிலும் இத்தொடரை இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் (SLBF), இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்து சங்கம் ஆகியவற்றின் அனுமதியோடு தேசிய அளவிலான போட்டிகளாக நடாத்த போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இம்முறை கிண்ணத்துக்காக நாடு பூராகவும் உள்ள 8 பாடசாலை அணிகள் மோதுகின்றன. இப் பாடசாலைகள் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் A குழுவில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி, கண்டி திரித்துவக் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மற்றும் கொழும்பு வெஸ்லி கல்லூரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதோடு, B குழுவில் உள்ள பாடசாலைகளாக, பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி, காலி மஹிந்த கல்லூரி, நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலைகள் இருக்கின்றன.
தொடரின் போட்டிகள் முதலில் குழுநிலை ஆட்டங்களாக இடம்பெறும். அதன் பின்னர் குழு நிலைப் போட்டிகளில் முன்னிலை பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும். அதில் வெற்றிபெறும் அணிகள், தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் மோதும். அதோடு, தொடரில் மூன்றாம் இடத்தினைப் பெறும் பாடசாலை யார் எனத் தீர்மானிக்கும் போட்டியும் இடம்பெறும். இப்போட்டியில் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற இரண்டு அணிகளும் பங்கெடுக்கும்.
3 வருடங்களுக்குப் பிறகு தர்ஜினி சிவலிங்கத்துக்கு தேசிய அணியில் வாய்ப்பு
இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கான தேர்வு இந்த..
இதுதவிர, இந்த கூடைப்பந்தாட்ட தொடரினை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்கு வகித்த பொலிஸ் அதிகாரியான I.T. கனகரத்னம் அவர்களின் நினைவை ஒட்டியும், “I.T. சவால் கிண்ணம்” என்ற பெயரில் சிநேகபூர்வமான கூடைப்பந்தாட்டப் போட்டி ஒன்று ஞாயிற்றுக்கிழமை (மாலை 5 மணியளவில்) புனித மைக்கல் கல்லூரியின் மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இத் தொடரில் பங்குபெறவுள்ள புனித பேதுரு கல்லூரி மற்றும் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆகியவை அண்மையில் இடம்பெற்ற தேசியமட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. எனவே, இந்த ஹேர்பேர்ட் கிண்ணத்தின் இந்தப் பருவகாலத்திலும் இந்த பாடசாலைகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்வுகூறக்கூடியதாக உள்ளது.
இம்முறைக்கான தொடரில் புதிதாக பாடசாலைகள் பங்கேற்பதால், இத்தொடரினை அறிமுகம் செய்யும் நோக்கோடு சனிக்கிழமை (28) நடைபவணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
2018ஆம் ஆண்டுக்கான ஹேர்பேர்ட் கிண்ண கூடைப்பந்தாட்ட தொடருக்கு பிரதான அனுசரணையாளர்களாக மொபிடல் நிறுவனம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, புதிய விடயங்களுடன் இம்முறையும் இடம்பெறவுள்ள இந்த கூடைப்பந்தாட்ட தொடர், மட்டக்களப்பின் கூடைப்பந்தாட்ட இரசிகர்களுக்கு இம்முறையும் விருந்துபடைக்கும் ஒரு நிகழ்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இக் கூடைப்பந்தாட்ட தொடரின் அறிக்கைகள், புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றைக் ThePapare.com ஊடாக காண முடியும்.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<