மேற்கிந்திய தீவுகளுடன் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்

4980

உலகக்கிண்ண தொடரின் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டியில் இரு அணிகளும் பந்துவீசுவதற்கு தாமதமாகிய காரணத்தினால் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட ஏனைய வீரர்களுக்கும், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் உள்ளிட்ட ஏனைய வீரர்களுக்கும் அபராதம் விதித்துள்ளது.

12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இவ்வுலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு போட்டிகளும் மிக விறுவிறுப்பான போட்டிகளாக அமைந்திருக்கின்றன. இந்நிலையில் லீக் தொடரின் 39 ஆவது போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று முன்தினம் (01) டர்ஹமில் நடைபெற்றது. 

அவிஷ்க மற்றும் மாலிங்கவால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில், நேற்று (01)…

குறித்த போட்டியில் இலங்கை அணியின் சிறப்பான துடுப்பாட்ட வரிசை காரணமாகவும், இறுதி நேரத்தில் அஞ்செலோ மெத்திவ்ஸின் பந்துவீச்சு காரணமாகவும் போட்டி இலங்கை அணியின் கைக்கு மாறியது. இதனால் இலங்கை அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. மேலும் நடப்பு உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி 250 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பமாகவும் இப்போட்டியில் பெற்ற ஓட்ட எண்ணிக்கை அமைந்திருந்தது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு விதமான போட்டிகளுக்கும் ஒவ்வொரு வரையறைகளை விதித்திருக்கின்றது. அந்த வகையில் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் பந்து வீசுவதற்கு குறிப்பிட்டளவு நேரம் வழங்கியிருக்கின்றது. இந்த போட்டியின் போது இலங்கை அணியினரும் மேற்கிந்திய தீவுகள் அணியிரும் குறித்த நேரத்திற்குள் 50 ஓவர்களையும் வீச தவறிய காரணத்தினால் இரு அணித்தலைவர்கள் உட்பட ஏனைய இருபது வீரர்களுக்கும் ஐ.சி.சி இனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும், அணித் தலைவர்கள் மற்றும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

50 ஓவர்கள் வீசுவதற்காக இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட நேரத்தில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளால் 48 ஓவர்கள் மாத்திரமே வீச முடிந்தது. இதன் காரணமாக மீதியாக காணப்பட்ட இரு ஓவர்களையும் வீசுவதற்கு இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் தேவைப்பட்டிருந்தது.

குறித்த இரு ஓவர்களை வீச மேலதிக நேரம் எடுத்தமையினால், ஒரு ஓவருக்கு வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் என்ற அடிப்படையிலும், குறித்த அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு அபராதம் என்ற அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர்களான திமுத் கருணாரத்ன, ஜேசன் ஹோல்டர் ஆகியோருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவீத அபராத தொகையும், இரு அணிகளையும் சேர்ந்து போட்டியில் விளையாடிய ஏனைய இருபது வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் 20 சதவீத அபராத தொகையும் ஐ.சி.சி இனால் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை குறித்த போட்டியின் கள நடுவர்களான ப்ரூஸ் ஒக்ஷென்போர்ட், போல் ரைபல் மூன்றாம் நடுவர் சுந்தரம் ரவி மற்றும் நான்காம் நடுவர் ரொட் டக்கர் ஆகியோர் உறுதிப்படுத்த, குறித்த போட்டியின் மத்தியஸ்தரான டேவிட் பூண் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சதங்களில் சங்கக்காரவின் சாதனையை சமப்படுத்திய ரோஹித் சர்மா

ஒரே உலகக் கிண்ணத் தொடரில் நான்கு சதங்கள் அடித்து ரோஹித் சர்மா சாதனை…

போட்டி முடிவடைந்ததன் பின்னர் இலங்கை அணித்தலைவவர் திமுத் கருணாரத்ன மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 12 மாதங்களுக்குள் குறிப்பிட்ட இது போன்ற குறைந்த பந்துவீச்சுப் பிரதி அணித்தலைவராக திமுத் கருணாரத்ன, ஜேசன் ஹோல்டர் ஆகியோரினால் பதிவு செய்யப்படுமானால் அவர்கள் போட்டித் தடையை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

இலங்கை அணி ஏற்கனேவே அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடரின் இலங்கை அணியின் இறுதிப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (06) இந்திய அணியுடன் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<