ஐ.சி.சி டெஸ்ட் தர வரிசையில் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றிய ரங்கன ஹேரத்

1157

ஐ.சி.சி இன் புதிய டெஸ்ட் தர வரிசைப்படி இரண்டாம் இடத்திலிருந்த இந்திய வலதுகை சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினைப் பின்தள்ளி 32 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்திலிருக்கும் மற்றுமொரு இந்திய சுழல் பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்துக்கு ரங்கன ஹேரத் முன்னேறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்றிருந்த டெஸ்ட் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் வெளிப்படுத்தியிருந்த திறமைகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.சிசி. இனால் ஜூலை 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நிறைவுற்ற ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அதேவேளை சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்தியதன் காரணமாக இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

2011 உலகக் கிண்ண தோல்வி : அர்ஜுனவை அடுத்து மஹிந்தானந்தவுக்கும் சந்தேகம்

இந்த புதிய தர வரிசையானது, நடைபெற்றிருந்த இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை உள்ளடக்கியிருந்த அதேவேளை முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்த தென்னாபிரிக்க அணி, டிரெண்ட் பிரிட்ஜ்ஜில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 340 ஓட்டங்களால் வெற்றியீட்டி 1-1 என தொடரை சமப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள 39 வயதான இடது கை சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மொத்தமாக 384 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அதேநேரம் அண்மையில் நிறைவுற்ற ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியில் 249 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேநேரம், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் சமனான புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் ரங்கன ஹேரத்துடன் தென்னாபிரிக்க அணியை சேர்ந்த கேஷவ் மகாராஜ் ட்ரென்ட் பிரிட்ஜ்ஜில் நடைபெற்றிருந்த இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக 545 புள்ளிகளை பெற்று 26ஆவது இடத்திலிருந்து 12ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அந்த வகையில், தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற நான்காவது சுழல்பந்து வீச்சாளராக இவர் பதிவானார். 1992ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்க அணி டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற நிலையில், இதற்கு முன்னதாக அவ்வணி சார்பாக போல் ஹாரிஸ் 705 புள்ளிகள், போல் ஆடம்ஸ் 588 புள்ளிகள் மற்றும் நிக்கி போஜே 545 புள்ளிகளைப் பெற்றமையே கூடிய புள்ளிகளாக பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஜிம்பாப்வே அணித் தலைவர் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் கிராம் கிரீமர் இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியதனுடாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் தடவையாக 53ஆவது இடத்திலிருந்து 20ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ட்ரெண்ட் பிரிட்ஜில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு படி முன்னேறி ஐந்தாவது இடத்திலிருந்து 4ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

குசல் பெரேரா, திசர பெரேரா ஆகியோர் ராங்பூர் அணியில்

அதேவேளை ஐ.சி.சி. இனால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில், ஹஷிம் அம்லா இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முறையே 78 மற்றும் 87 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம், முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள அதேவேளை 6 இடங்கள் முன்னேறி தர வரிசையில் ஏழாவது இடத்தை கைப்பற்றியுள்ளார்.

அதேநேரம் ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர்களான கிரைக் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் சதம் குவித்ததன் காரணமாக முறையே 40 மற்றும் 48ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர். ஜிம்பாவே அணிக்கெதிரான போட்டியில் முறையே 45 மற்றும் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்று ஆட்ட நாயகன் விருதை வென்றதோடு இலங்கை அணி 388 என்ற கடின வெற்றி இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைக்க காரணமாக இருந்த அசேல குணரத்ன  19 இடங்கள் முன்னேறி முதல் தடவையாக 79ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.