பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு இலகு வெற்றி

1670

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் அணியுடனான T20 பயிற்சி போட்டியை பங்களாதேஷ் அணி 41 ஓட்டங்களால் இலகுவாக வென்றது.

[rev_slider LOLC]

கொழும்பு CCC மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, அசித்த பெர்னாண்டோ வீசிய அபார பந்துவீச்சு மூலம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சௌம்யா சர்கார் ஓட்டமேதுமின்றி வெளியேறினார்.

19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியின் இளம் வீரர் ஜெஹான் டேனியல் அடுத்து வந்த சப்பிர் ரஹ்மானின் விக்கெட்டை வீழ்த்தினார். ரஹ்மான் ஒரு ஓட்டத்துடன் வெளியேற பங்களாதேஷ் அணி 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  

சுதந்திர கிண்ண தொடரில் இலங்கை அணியின் வியூகம் குறித்த சந்திமாலின் கருத்து

எனினும் மறுமுனையில் ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிடோன் தாஸ் (41), மஹ்மதுல்லாஹ் (43), விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் முஷ்பீகுர் ரஹீம் (65) சிறப்பாக துடுப்பெடுத்தாடி பங்களாதேஷ் அணிக்கு வலுவான ஓட்டங்களை பெற உதவினர்.

இதன் போது முஷ்பீகுர் ரஹீம் 65 ஓட்டங்களை பெறுவதற்கு 44 பந்துகளில் 6 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் விளாசினார். இதன் மூலம் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ சிறப்பாக செயற்பட்டார். அவர் தனது 4 ஓவர்களுக்கும் 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அதே போன்று 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியின் வீரர் ஜெஹான் டேனியல், லஹிரு குமார மற்றும் சகலதுறை வீரர் திக்ஷில டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.   

சவாலான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் டில்ஷான் முனவீர வேகமாக ஓட்டங்களை பெற ஆரம்பித்தனர். இதில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திக்வெல்ல 13 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 27 ஓட்டங்களை விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.    

டில்ஷான் முனவீர, சதீர சமரவிக்ரம மற்றும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தேர்வாளர்களின் அவதானத்தை பெறுவதற்கு தவறினர். இதனால் இலங்கை கிரிக்கெட சபை தலைவர் அணி 10 ஓவர்களில் 82 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.  

உலகக் கிண்ண தகுதிச்சுற்றில் ஆப்கானிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி

எஞ்சிய 10 ஓவர்களுக்கும் இலங்கை பதினொருவர் அணிக்கு 105 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் எஞ்சிய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறினார்கள். இதனால் அந்த அணி 19 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.    

பயிற்சி போட்டி என்பதால் பங்களாதேஷ் அணியின் ஒன்பது வீரர்கள் பந்துவீசினர். இதில் ருபெல் ஹொஸைன் மற்றும் தக்சின் அஹமட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அணி சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை (08) இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஸ்கோர் விபரம்

 

முடிவு – பங்களாதேஷ் அணி 41 ஓட்டங்களால் வெற்றி