ப்ரிமியர் லீக் பிரிவு 1 இற்கான கால்பந்தாட்ட போட்டிகளின் அரையிறுதி சுற்றுகள் இவ்வாரம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெற்றது. அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற பெலிகன்ஸ் மற்றும் மொரகஸ்முல்ல அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.

ரெட் ஸ்டார் மற்றும் பெலிகன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி  

செப்டெம்பர் 3ஆம் திகதி களனி கால்பந்தாட்ட மைதானத்தில் முதலாவது அரையிறுதி ஆட்டம் ரெட் ஸ்டார் மற்றும் பெலிகன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளும் கிடைத்த வாய்ப்பை ஆரம்பத்தில் பயன்படுத்திக்கொள்ளத் தவறின. எனினும் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ரெட் ஸ்டார் அணியினர் 34ஆவது நிமிடத்தில் மொஹமட் அப்ரார் மூலமாக முதலாவது கோல் அடித்து போட்டியில் முன்னிலைபெற்றது. முதற் பாதியில் பெலிகன்ஸ் அணி கோல்கள் ஏதும் அடிக்காத நிலையில் முதற் பாதி 1-0 என ரெட் ஸ்டார் அணி வசம் நிறைவடைந்தது.

இரண்டாவது பாதியை பின்னடைவில் ஆரம்பித்த பெலிகன்ஸ் அணி போட்டியில் வெற்றிபெற வேண்டும் எனும் நோக்கத்தோடு இரண்டாம் பாதியில் களமிறங்கியது. இரண்டாம் பாதியிலும் இரண்டு அணிகளும் சிறப்பாக போட்டி போட்டுக்கொள்ள, பெலிகன்ஸ் அணியின் கிஹான் சிறிசேன 62ஆவது நிமிடத்தில் கோல் அடித்து பெலிகன்ஸ் அணிக்கு ஊக்கம் அளித்தார்.

முதலாவது பாதியில் சிறப்பாக விளையாடாத பெலிகன்ஸ் அணி ஒரு கோல் அடித்த பின்பு தனது திறமையை வெளிக்காட்டத் துவங்கியது.71ஆவது நிமிடத்தில் சண்முகராஜா சஞ்சீவ் பெலிகன்ஸ் அணி சார்பாக கோல் அடித்ததன் மூலம் போட்டியில் முதன் முதலாக பெலிகன்ஸ் அணி முன்னிலைபெற்றது.ரெட் ஸ்டார் அணிக்கு இன்னொரு கோல் அடிக்க வாய்ப்பு அளிக்காது 81ஆவது நிமிடத்தில் சதுர குணரத்ன பெலிகன்ஸ் அணி சார்பாக கோல் அடித்து ரெட் ஸ்டார் அணியின் இறுதிப் போட்டிக்கான கனவை உடைத்து எறிந்தார்.

ரெட் ஸ்டார் அணி கோல் அடிக்க முனைந்த போதும் அவ் அணியால் மேலதிக கோல் ஒன்றையும் அடிக்க முடியாத நிலையில் போட்டியை பெலிகன்ஸ் அணி 3-1 என வென்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது.

மஞ்சள் அட்டைகள் மொஹமட் ரிகாஸ் (ரெட் ஸ்டார்), மொஹமட் இலாஹி (ரெட் ஸ்டார்), மொஹமட் அறபாக்(ரெட் ஸ்டார் )

மொரகஸ்முல்ல மற்றும் கொமராட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

பிரிமியர் லீக் போட்டிகளின் 2ஆவது அரை இறுதிப் போட்டி மொரகஸ்முல்ல மற்றும் கொமராட்ஸ் அணிகளுக்கிடையில் செப்டெம்பர் 4ஆம் திகதி ரத்னபுர சீவலி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் நோக்குடன் இரு அணிகளும் சிறப்பான போட்டியை வெளிப்படுத்தியது. ஆரம்பம் முதல் மொரகஸ்முல்ல அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் இரு அணிகளும் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டன. எந்த அணி முதலில் கோல் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க 38ஆவது நிமிடத்தில் கொமராட்ஸ் அணியின் திசாநாயக்க கோல் அடித்து போட்டிக்கு உயிரூட்டினார்.

அதன் பின் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்காததால் கொமராட்ஸ் அணி மொரகஸ்முல்ல அணியை பின்தள்ளியவாறு முதலாம் பாதியை நிறைவு செய்தது.

இரு அணிகளையும் ஒரு கோல் மட்டுமே வேறாக்கிய நிலையில் இரண்டாம் பாதி ஆரம்பித்தது. ஒரு கோல் கொடுத்திருந்தாலும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் கனவில் மொரகஸ்முல்ல அணி இரண்டாவது பாதியில் நிலையானதும், சிறப்பானதுமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 65ஆவது நிமிடத்தில் மொஹமட் ஷிபான் மொரகஸ்முல்லல அணி சார்பாக முதலாவது கோல் அடித்து கொமராட்ஸ் அணிக்கு அபாய மணி அடித்தார்.

இரண்டாவது பாதியில் மொரகஸ்முல்ல அணி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதன் விளைவாக புபுதுவின் மூலமாக 83ஆவது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியில் முன்னிலை பெற்றது. முதலாம் பாதியில் காணப்பட்ட உத்வேகம் இரண்டாம் பாதியில் கொமராட்ஸ் அணியிடம் பறிபோனது ஏமாற்றம் அளித்தது.

கொமராட்ஸ் அணி மீண்டும் ஒரு கோல் அடித்து போட்டியை சமநிலை செய்ய முனைந்த பொழுதும் மொரகஸ்முல்ல அணியின் வீரர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. போட்டி முடிவடைய செக்கன்களே எஞ்சியிருந்த நிலையில் மேலதிக நேரமான 90+5 ஆவது நிமிடத்தில் டிலான் மதுஷங்க மொரகஸ்முல்ல அணிக்கு கோல் அடித்து இறுதிப் போட்டியில் மொரகஸ்முல்ல அணியின் இடத்தை உறுதி செய்தார்.

இறுதியில் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அரையிறுதியை வென்ற மொரகஸ்முல்ல அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இறுதிப் போட்டியில் மொரகஸ்முல்ல அணி பெலிகன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

மஞ்சள் அட்டைகள்டி...சுரேஷ் (மொரகஸ்முல்ல), எஸ்.எம்.சி.குணசேகர (மொரகஸ்முல்ல), எம்.ஆர்.எம்.சியாம் (கொமராட்ஸ்), மொஹமட் நவ்மான் (கொமராட்ஸ்), ஜெ.எஸ்.குமார (கொமராட்ஸ்)