இலங்கை – இந்திய தொடர்களில் மீண்டும் திகதி மாற்றம்

1316
Getty Images

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களுக்கான 25 பேர் அடங்கிய இலங்கையின் எதிர்பார்க்கை குழாம் மற்றும் கிரிக்கெட் தொடர்களுக்கான திகதி என்பவை உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. 

அதன்படி, இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இலங்கை அணியின் புதிய தலைவராக தசுன் ஷானக்க நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, பிரதி அணித்தலைவர் பொறுப்பு தனன்ஞய டி சில்வாவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கை – இந்தியா இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் சபை, இரு அணிகளும் பங்குபெறும் இந்த கிரிக்கெட் தொடர்களை எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகும் ஒருநாள் தொடரில்  இருந்து நடாத்த ஏற்பாடு செய்த போதும், இலங்கை அணியின் முகாமைத்துவக் குழுவில் இரண்டு பிரமுகர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் இந்த கிரிக்கெட் தொடர்கள் எதிர்வரும் 17ஆம் திகதியில் ஆரம்பமாகும் எனத் தெரிவித்திருந்தது. 

எனினும், மீண்டும் ஒரு முறை தொடரின் திகதிகளில் மாற்றம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை, இரு அணிகளும் பங்குபெறும் கிரிக்கெட் தொடர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்திருக்கின்றது. 

இதேநேரம், இருவகைப் போட்டிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள 25 பேர் அடங்கிய இலங்கை குழாத்தில் இருந்து ஒருநாள், T20 என ஒவ்வொரு வகைப்போட்டிகளுக்காகவும் 18 பேர் அடங்கிய இலங்கையின் இறுதிக்குழாம் தெரிவு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இலங்கையின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடிய வீரர்களில் வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப், துடுப்பாட்டவீரர் ஒசத பெர்னான்டோ ஆகியோருக்கு இந்திய அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதோடு, இலங்கையின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரும் தெரிவுகளுக்காக கருத்திற்கொள்ளப்படவில்லை.

ICC இன் நிறைவேற்று அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மனு சவ்னி

இந்த வீரர்கள் ஒரு பக்கமிருக்க லஹிரு குமார, கசுன் ராஜித, பானுக்க ராஜபக்ஷ, லஹிரு உதார, அஷேன் பண்டார ஆகிய வீரர்கள் இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். 

இலங்கை எதிர்பார்க்கை குழாம் – தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா (பிரதி தலைவர்), அவிஷ்க பெர்னான்டோ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க, பானுக ராஜபக்ஷ, மினோத் பானுக்க, லஹிரு உதார, அஷேன் பண்டார, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், ப்ரவீன் ஜயவிக்ரம, அகில தனன்ஞய, லக்ஷான் சந்தகன், சாமிக்க கருணாரட்ன, தனன்ஞய லக்ஷான், பினுர பெர்னான்டோ, இஷான் ஜயரட்ன, கசுன் ராஜித, துஷ்மன்த சமீர, லஹிரு குமார, இசுரு உதான, ஷிரான் பெர்னான்டோ, அசித பெர்னான்டோ

தொடர் அட்டவணை 

ஒருநாள் தொடர் 

முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 18 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 20 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 23 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்

T20 போட்டி 

முதல் T20 போட்டி – ஜூலை 25 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்

இரண்டாவது T20 போட்டி – ஜூலை 27 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்

 மூன்றாவது T20 போட்டி – ஜூலை 29 – கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்

மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு…