சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) நிர்வாகக்குழு, அதன் நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டு வந்த மன்னு சவ்னியை அதிரடியான முறையில் பதவி நீக்கம் செய்திருப்பதாக அறிவித்திருக்கின்றது.
மீண்டும் ஒத்திவைக்கப்படும் LPL தொடர்!
மன்னு சவ்னி தனது விசாரணை தொடர்பாக எழுதிய கடிதமொன்றில் ICC இற்கும், அதன் தலைவருக்கும் எதிராக தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் என்ற காரணத்தினாலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம், மன்னு சவ்னி நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதனை அடுத்து, ஜியோப் அல்லர்டைஸ் ICC இன் தற்காலிக நிறைவேற்று அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மன்னு சவ்னி பதவி நீக்கம் செய்யப்பட்ட விடயம் தொடர்பில், ICC தனது ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.
“சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரியான மன்னு சவ்னி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் (ICC) நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுகின்றார். தலைமைத்துவக் குழுவின் ஆதரவோடு, ஜியோப் அல்லர்டைஸ் தற்காலிக நிறைவேற்று அதிகாரியாக செயற்படுவார்.”
இதேநேரம் Cricbuzz செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் டொம் ஹர்ரிஸன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் முன்னாள் உறுப்பினர் ஜேம்ஸ் சதர்லன்ட், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் எல்வொர்த் மற்றும் இந்தியாவின் ரவ்னீத் கில் ஆகியோரில் ஒருவர் ICC இன் அடுத்த நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<