வரலாற்றை மாற்றியமைத்த ஸ்கொட்லாந்து

899

ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினை ஸ்கொட்லாந்து 42 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>> தொடரில் முன்னேற கட்டாய வெற்றிகளை எதிர்பார்த்துள்ள இலங்கை

மேலும் இந்த வெற்றி ஸ்கொட்லாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளில் பதிவு செய்த முதல் வெற்றியாகவும் மாறியிருக்கின்றது.

இரு அணிகளும் குழு B இற்காக மோதிய இந்தப் போட்டி ஹொபார்ட் நகரில் இன்று (17) ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் ஸ்கொட்லாந்தை துடுப்பாடப் பணித்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தது.

ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காமல் இருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜோர்ஜ் முன்ஸி 53 பந்துகளை எதிர்கொண்டு 9 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

>> எமது பந்துவீச்சாளர்கள் திட்டங்களை சரியாக செயற்படுத்தவில்லை – தசுன்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 161 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியின் வெற்றி இலக்கை அடைய முடியாமல் 18.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 118 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 38 ஓட்டங்கள் எடுத்திருந்த போதும் அவரது துடுப்பாட்டம் வீணானது.

>> T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்கு அதிர்ச்சி தோல்வி

இதேநேரம் ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் மார்க் வாட் 3 விக்கெட்டுக்களையும், ப்ராட் வீல் மற்றும் மைக்கல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்து தமது தரப்பு வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்கொட்லாந்து அணி வீரர் ஜோர்ஜ் முன்ஸி தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

ஸ்கொட்லாந்து – 160/5 (20) ஜோர்ஜ் முன்ஸி 66(53)*, அல்சாரி ஜோசேப் 28/2(4), ஜேசன் ஹோல்டர் 14/2(3)

மேற்கிந்திய தீவுகள் – 118 (18.3) ஜேசன் ஹோல்டர் 38(33), மார்க் வாட் 12/3(4), மைக்கல் லீஸ்க் 15/2(4), பிராட் வீல் 32/2(4)

முடிவு – ஸ்கொட்லாந்து 42 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<