அவுஸ்திரேலிய போட்டியில் மாற்றங்களை மேற்கொள்ளும் இலங்கை அணி?

ICC ODI World Cup 2023

2573
ICC ODI World Cup 2023

இலங்கை கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலியாவுடன் திங்கட்கிழமை (16) ஆடவுள்ள தமது உலகக் கிண்ணப் போட்டியில், தமது வீரர்கள் குழாத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் என நம்பப்படுகின்றது.

>>ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாகிய சமரி அதபத்து!

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா, மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன்  விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணியினர் அதில் தோல்விகளைச் சந்தித்திருந்த நிலையில், தொடரில் தமது முதல் வெற்றியினை இன்னும் எதிர்பார்த்து காணப்படுகின்றனர்.

விடயங்கள் இவ்வாறு காணப்பட இலங்கை அணியின் அடுத்த இரண்டு போட்டிகளும் லக்னோவ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோற்பட்டை உபாதைகளுக்கு முகம் கொடுத்திருக்கும் வீரர்களான குசல் பெரேரா மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சிப் போட்டிகளிலும் உபாதை ஆபத்தினை முகம் கொடுத்திருந்த குசல் பெரேரா, தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள தோற்பட்டை உபாதையில் இருந்து தேறுவதற்கு சில நாட்கள் தேவைப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு அவரின் இடத்தினை இலங்கை அணியில் திமுத் கருணாரட்ன எடுத்துக் கொள்வார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் 20 வயது நிரம்பிய மதீஷ பதிரனவிற்குப் பதிலாக இலங்கை அணி லஹிரு குமாரவிற்கு அவுஸ்திரேலிய மோதலில் வாய்ப்பு வழங்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>>குசல் மெண்டிஸின் உடல் நிலை குறித்து வெளியாகிய அறிவிப்பு

இதேவேளை பாகிஸ்தான் போட்டியில் உபாதைச் சிக்கல்களுக்கு முகம் கொடுத்திருந்த இலங்கை அணியின் உப தலைவரான குசல் மெண்டிஸ் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் ஆட பூரண உடற்தகுதியினைப் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை அணி நாளை (14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (15) ஆகிய நாட்களில் அவுஸ்திரேலிய போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<