UAE அணியுடன் T20I தொடரில் ஆடவுள்ள ஆப்கானிஸ்தான்

Afghanistan tour of UAE 2023

106

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு (UAE) எதிராக மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையிலான இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தொடருக்கான முதற்கட்ட ஆப்கானிஸ்தான் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள அணிக்கு முதல் வெற்றி

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் இரண்டு கிரிக்கெட் சபைகளும் கைச்சாத்திட்டுள்ளன.

அந்தவகையில் குறித்த போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை வழங்கவுள்ளதுடன், குறித்த இந்த காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆரம்பமாகவுள்ள இந்த தொடருக்கான முதற்கட்ட குழாத்தில் ரஷீட் கான் தலைமையில் 22 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த 22 பேர்கொண்ட குழாத்திலிருந்து 17 வீரர்கள் இறுதிக்குழாத்தில் இடம்பெறுவர் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான ஜொனதன் ட்ரொட்டின் ஒப்பந்தக்காலம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அவருடைய ஒப்பந்தத்தை இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணம் வரை நீடிக்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அதேநேரம் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளரான ரயன் மெரொனின் ஒப்பந்தக்காலமும் நீடிக்கப்பட்டுள்ளதுடன், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரான உமர் குல்லின் பதவிக்காலம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் முதற்கட்ட குழாம்

ரஷீட் கான் (தலைவர்), ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், அப்துல் ரஹ்மான் ரஹ்மானி, அப்ஷர் சஷாய், அஷமதுல்லாஹ் ஒமர்ஷாய், பிலால் சமி, பரீட் அஹ்மட் மலிக், பசல் ஹக் பரூகி, குல்பதீன் நயீப், ஹஸரதுல்லாஹ் சஷாய், இப்ரஹீம் ஷர்டான், முஜீப் உர் ரஹ்மான், நஜிபுல்லாஹ் ஷர்டான், நங்கயல் கரோட்டி, நவீன் உல் ஹக், நிஜாட் மசோத், நூர் அஹ்மட், ரஹ்மட் ஷா, செதிகுல்லாஹ் அடல், சஹிதுல்லாஹ் கமல், ஷரபுதீன் அஷ்ரப், ஷாஹிர் கான்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<