தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் சாமிக்க கருணாரத்ன

2168

லங்கை டெஸ்ட் அணிக்கு அண்மையில் அறிமுகமாயிருந்த பந்துவீச்சு சகலதுறை வீரரான சாமிக்க கருணாரத்ன, தற்போது தொடைத்தசை உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருப்பதால் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்திலிருந்து வெளியேறியிருக்கின்றார்.

இலங்கை அணியில் மொஹமட் சிராஸ் – உத்தியோகபூர்வ அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் …

இம்மாத ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணிக்காக அறிமுகமான சாமிக்க கருணாரத்ன, தென்னாபிரிக்க வீரர்களுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இலங்கை குழாமில் இடம்பிடித்திருந்தார்.

எனினும், தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடாத அவர் தற்போது ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளார்.

இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் குசல் பெரேராவின் போராட்ட சதத்தோடு த்ரில்லர் வெற்றி ஒன்றினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாமிக்க கருணாரத்னவிற்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான எஞ்சியிருக்கும் டெஸ்ட் போட்டியில் ஆட 21 வயதேயான வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாந்துவிற்கு இலங்கை அணி அழைப்பு விடுத்திருக்கின்றது.

இலங்கை அணிக்காக முன்னர் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் ஆடியிருக்கும் அசித்த பெர்னாந்து இலங்கையின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமை காட்டி வீரர்களில் ஒருவராக இருக்கின்றார்.  

இதுவரையில் 25 முதல்தரப் போட்டிகளில் ஆடியுள்ள அசித்த பெர்னாந்து 25.03 என்கிற பந்துவீச்சு சராசரியுடன் 64 விக்கெட்டுகளை சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

தென்னாபிரிக்க – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்கள் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் இந்நிலையில் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போர்ட் எலிசபெத் நகரில் வியாழக்கிழமை (21) ஆரம்பமாகின்றது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<