அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக க்ரெஹெம் ஹிக்

3352
Graeme Hick appointed batting coach for Australia

அவுஸ்ரேலிய  தலைமை பயிற்சியாளராக அந்த நாட்டின் டேரன் லீமன்  உள்ளார். இவருடன் களத்தடுப்பு  பயிற்சியாளராக கிரேக் ப்ளேவெட் உள்ளதோடு  பந்து வீச்சு பயிற்சியாளராக சமீபத்தில் டேவிட் சாஹெர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்  க்ரெஹெம் ஹிக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தென் ஆபிரிக்க அணி அடுத்த மாதம் அவுஸ்ரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. அந்த தொடரின் போது க்ரெஹெம் ஹிக் துடுப்பாட்ட  பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அதில் இருந்து 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடர் வரை பயிற்சியாளராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா அணி ஆசியக் கண்டத்தில் கடைசி 9 டெஸ்டிலும் தோல்வி அடைந்துள்ளது. சமீபத்தில் இலங்கை அணிக்கெதிராக 3-0 என படு தோல்வியை சந்தித்தது. அடுத்த வருடம் பிப்ரவரிமார்ச் மாதத்தில் அவுஸ்ரேலியா அணி இந்தியா வருகிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியின் துடுப்பாட்ட வீரர்களை  தயாராக்குவது இவருக்கு பெரிய சவாலாக இருக்கும். தென் ஆபிரிக்க  தொடரில் இருந்து க்ரெஹெம் ஹிக் நான்கு சீசனுக்கு இவர் பயிற்சியாளராக இருப்பார்.

சிம்பாப்வேயை பிறப்பிடமாக கொண்ட  இங்கிலாந்து அணிக்காக விளையாடிய 6 அடி  3 அங்குலம்  உயரம் கொண்ட   க்ரெஹெம் ஹிக் முதல் தர போட்டிகளில் 41,112 ஓட்டங்களை  குவித்துள்ளார். முதல்தர போட்டிகளில் ஒரு இன்னிங்சில் நாற்சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். அத்தோடு அவர் முதல்தரப் போட்டிகளில் 136 சதங்கள் மற்றும் 158 அரைச் சதங்களை விளாசி உள்ளார். இங்கிலாந்து அணிக்காக 1991 முதல் 2001 வரை 10 ஆண்டுகளில் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 31.32 என்ற துடுப்பாட்ட சராசரியில் 3383 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதில் அதிகபட்ச ஓட்டம் 178 ஓட்டங்களாகும்.

இதேவேளை அவுஸ்ரேலியா கிரிக்கட்  அணி தென் ஆபிரிக்க மண்ணில் எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் இம்மாதம் 30ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.  இதற்கு முன் அவுஸ்ரேலியா கிரிக்கட்  அணி  27ஆம்  திங்க்தி  அயர்லாந்து அணிக்கு  எதிராக  ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்த 6 போட்டிக்கான அவுஸ்ரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஷோன் மார்ஷ் மற்றும் ஜேம்ஸ் போல்க்னர் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

இலங்கை தொடரின் போது இடதுகை துடுப்பாட்ட வீரர்  ஷோன் மார்ஷூக்கு கை விரலில் முறிவு ஏற்பட்டது. தற்போது வரை அவரது காயம் குணமாகாததால் அவுஸ்ரேலியா அணியில் இடம் பிடிக்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக உஸ்மான்  கவாஜா அணியில் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்.

அதே போல் சகலதுறை வீரர்  ஜேம்ஸ் போல்க்னருக்கு பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டது. ஆகவே இவரும் அவுஸ்ரேலிய அணியில் இணைய  மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவருக்குப் பதிலாக மாற்று வீரர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க் மற்றும் ஜொஸ் ஹெசில்வுட்டிற்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது இவ்வாறு இருக்க மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் ராம்நரேஷ் சர்வான் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். 36 வயதான ராம்நரேஷ் சர்வான் கடந்த 2000ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மொத்தம் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 சதங்களுடன் 5842 ஓட்டங்களை  பெற்றுள்ளார். அத்தோடு 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதங்களுடன் 5804 ஓட்டங்களையும், 18 டி20 போட்டிகளில் விளையாடி 298 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கடைசியாக 2013ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக விளையாடினார். அதன்பின் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால், தனது ஓய்வு குறித்து எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில் ராம்நரேஷ் சர்வான் கயானாவில் இன்று தனது ஓய்வை முறைப்படி அறிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்