இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

4318

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20  தொடர்களுக்கான இலங்கை அணியின் தலைவராக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக நிரோஷன் டிக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள….

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான 17 பேர்கொண்ட அணிக்குழாமை, கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழு இன்று (14) அறிவித்துள்ளது. இந்த குழாமின் முக்கிய மாற்றங்களாக ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து தினேஷ் சந்திமால் மற்றும் T20 போட்டிகளுக்கான  தலைவர் பதவியிலிருந்து திசர பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டு, லசித் மாலிங்க புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லசித் மாலிங்கவின் தலைமையில் இலங்கை அணி கடந்த வருடம் ஒரு, ஒருநாள் போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்ததுடன், குறித்த போட்டியில் தோல்வியயை தழுவியிருந்தது. எனினும் 2014/16 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாலிங்க தலைமையில், 9 T20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடியுள்ளதுடன், அதில் 2014 ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி உட்பட 6 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.

அதே நேரம், தேசிய அணியின் உப தலைவராக முதல் முறையாக நிரோஷன் டிக்வெல்ல பெயரிடப்பட்டுள்ளார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்ற போதும், இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அணி சார்பில், அதிக ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேவேளை,  வெளியிடப்பட்டுள்ள இலங்கை குழாமை பொருத்தவரையில், இங்கிலாந்து தொடரிலிருந்து சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடற்தகுதியின்மை காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

சவால்களுக்கு மத்தியில் நியூசிலாந்தில் களமிறங்கவுள்ள இலங்கை அணி – Cricket Kalam 03

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்…..

இவருடன் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் உபாதைக்குள்ளாகிய குசல் ஜனித்பெரேரா, தனுஷ்க குணதிலக்க, அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் மீண்டும் அணிக்குள் இடம்பிடித்துள்ளனர். அசேல குணரத்ன இறுதியாக (ஜனவரி) பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்ததுடன், சீக்குகே பிரசன்ன கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அத்துடன், லஹிரு குமார தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான குழாமுக்கு திரும்பியுள்ளதுடன், தனுஷ்க குணதிலக்க ஜனவரி மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் பின்னர் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளார். தனுஷ்க குணதிலக்க ஆசியக் கிண்ணத் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த போதும், உபாதை காரணமாக அவர் குறித்த தொடரில் பங்கேற்கவில்லை.

இவ்வாறு, முக்கிய வீரர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருடன் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்த சதீர சமரவிக்ரம, அமில அபோன்சோ மற்றும் ஐ.சி.சி இன் தடைக்கு முகங்கொடுத்துள்ள அகில தனன்ஜய ஆகியோர் குழாமில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான T20  தொடரில் அறிமுகமாகியிருந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் இசுறு உதான ஆகியோர் T20 குழுாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் கமிந்து மெண்டிஸ், குறித்த தொடரில் இதுவரையில் 4 போட்டிகளில் விளையாடி 3 அரைச்சதங்கள் அடங்கலாக 174 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான நியுசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து பாகிஸ்தானை…

நியூசிலாந்து அணிக்கு எதிரான இலங்கை ஒருநாள் மற்றும் T20 குழாம்

லசித் மாலிங்க (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, அஞ்செலோ மெதிவ்ஸ், தனுஷ்க குணதிலக்க, குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், அசேல குணரத்ன, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, திசர பேரேரா, தசுன் சானக, லக்ஷான் சந்தகன், சீகுகே பிரசன்ன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, நுவன் பிரதீப், லஹிரு குமார

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (15) ஆரம்பமாகவுள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<