இங்கிலாந்து தொடருக்கான இலங்கையின் உத்தேச குழாம் அறிவிப்பு

281
AFP

இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களுக்கான 28 பேர் அடங்கிய இலங்கையின் உத்தேச அணிக்குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள IPL போட்டிகள்

அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட  ஒருநாள் மறறும் T20 தொடர்களில் விளையாடவுள்ளது. 

ஜூன் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள T20 தொடருடன் ஆரம்பமாகவிருக்கும் இந்த கிரிக்கெட் தொடர்களுக்காக, அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் உத்தேச குழாத்தில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் விளையாடிய இலங்கை அணியின் 18 பேரும் முழுமையாக இணைக்கப்பட்டிருக்கின்றனர். 

அந்தவகையில் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளிருந்தவாறே இன்று (30) இலங்கையினை வந்தடைந்திருக்கும் குறித்த அணியின் 18 வீரர்களும் மூன்று நாட்கள் கொண்ட சுயதனிமைப்படுத்தல் காலத்தினை பூர்த்தி செய்த பின், பயிற்சிகளை ஆரம்பிப்பர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம், பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்காத இலங்கை அணியின் வீரர்கள் 10 பேர் கடந்த 29ஆம் திகதி PCR பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் இயக்குனர் டொம் மூடியின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் தமது பயிற்சிகளை ஆரம்பித்து தனிமைப்படுத்தலில் இருக்கின்ற இலங்கை அணியின் ஏனைய வீரர்களுடன் பின்னர் இணைந்து கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

Video – ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்டுக்கள் எடுத்த பந்துவீச்சாளர் யார்?

தொடர்ந்து, ஜூன் மாத முதல் வாரத்தின் இறுதிப் பகுதியில் இந்த 28 பேர் அடங்கிய இலங்கை அணியில் இருந்து 22 பேர் அடங்கிய குழாம் தெரிவு செய்யப்பட்டு, குறித்த வீரர்கள் குழாம் ஜூன் மாத இரண்டாம் வார பகுதியில் இங்கிலாந்துக்கு பயணமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள இருவகைப் போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக குசல் ஜனித் பெரேரா செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயற்பட்ட முன்னணி வீரர்களான சரித் அசலன்க, கமில் மிஷார, சதீர சமரவிக்ரம, தனன்ஞய லக்ஷான் மற்றும் இஷான் ஜயரட்ன போன்ற வீரர்கள் இலங்கையின் உத்தேச குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். 

“வீரர்களின் அனுபவமின்மையே தோல்விக்கு காரணம்” – குசல் பெரேரா

அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர்களான நுவன் பிரதீப், கசுன் ராஜித ஆகியோருக்கும் இலங்கையின் உத்தேச குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்ற போதும் இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் மற்றும் சுரங்க லக்மால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இங்கிலாந்து தொடருக்கான இலங்கையின் உத்தேச குழாம்

குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, பெதும் நிஸ்ஸங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஞய டி சில்வா, அஷேன் பண்டார, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், அகில தனன்ஞய, லக்ஷான் சந்தகன், இசுரு உதான, சாமிக கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, ஷிரான் பெர்னாண்டோ, பிரவின் ஜயவிக்ரம, கசுன் ராஜித, இஷான் ஜயரட்ன, சரித் அசலன்க, கமில் மிஷார, சதீர சமரவிக்ரம, தனன்ஞய லக்ஷான், அவிஷ்க பெர்னான்டோ, ஓசத பெர்னான்டோ, நுவான் பிரதீப் 

இலங்கையின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்

T20 தொடர் 

  • முதல் T20 போட்டி – 23 ஜூன் – கார்டிப் 
  • இரண்டாவது T20 போட்டி – 24 ஜூன் – கார்டிப்
  • மூன்றாவது T20 போட்டி – 26 ஜூன் – சௌத்தம்ப்டன்

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் போட்டி – 29 ஜூன் – டேர்ஹம்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – 1 ஜூலை – லண்டன்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி  – 4 ஜூலை – ப்ரிஸ்டொல்

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<