உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிலிருந்து யுபுன் திடீர் விலகல்

World Athletics Championships 2023

121

நீண்ட காலமாக இத்தாலியில் பயிற்சி பெற்று வரும் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், தனது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த காயம் காரணமாக தாய்லாந்தின் பட்டாயாவில் அண்மையில் நடைபெற்ற 24ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் நிச்சயம் பங்கேற்பேன் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

”கடந்த சில மாதங்கள் எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கடினமாக இருந்தது. நான் காயத்தில் இருந்து மெதுவாக குணமடைந்து வருகிறேன். இந்த முடிவு எனக்கு மிகவும் கடினமாக இருந்தாலும், ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இரண்டு போட்டித் தொடர்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

எனவே, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்பதை சம்பந்தாட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதி ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுவதற்காக வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைந்தது. குறித்த காலப்பகுதியில் தனிநபர் போட்டி நிகழ்ச்சியொன்றுக்காக இலங்கை சார்பில் தகுதிபெற்ற ஒரே வீரர் யுபுன் அபேகோன்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரிச்சில் நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து தெற்காசியாவின் அதிவேக வீரராக மாறியதுடன், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு மொத்தம் 56 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பட்டியலில் யுபுன் அபேகோன் 42ஆவது இடத்தில் இருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<