லெஜன்ட்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

4949
Sri Lanka Legends vs West Indies Legends

வீதிப் பாதுகாப்பினை வலியுறுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் Road Safety World Series T20 தொடரின் இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் லெஜென்ட்ஸ் அணியை, இலங்கை லெஜன்ட்ஸ் 14 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு தொடரின் இறுதிப் போட்டிக்கும் இரண்டாவது முறையாக தெரிவாகியிருக்கின்றது.

>> T20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

தொடரின் முதல் அரையிறுதியில் அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணியினை இந்திய லெஜன்ட்ஸ் அணி வீழ்த்திய நிலையில், தொடரின் இரண்டாவது அரையிறுதி நேற்று (30) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணிகள் இடையில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் முதலில் இலங்கை லெஜன்ட்ஸ் வீரர்களை முதலில் துடுப்பாடப் பணித்தது. இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை லெஜன்ட்ஸ் வீரர்கள் 9 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கை லெஜன்ட்ஸ் துடுப்பாட்டம் சார்பில் இஷான் ஜயரட்ன அதிகபட்சமாக 19 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்களை எடுக்க, சனத் ஜயசூரிய 3 பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் டேவேந்திர பிஷூ மற்றும் கிரிஷ்மார் சான்டோக்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 173 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக நார்ஷிங் டியோநரைன் போராட்டம் காட்டி 39 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்த போதும் அவரது துடுப்பாட்டம் வீணானது.

மறுமுனையில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி பந்துவீச்சில் நுவான் குலசேகர மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

>> T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகுகிறார் பும்ரா?

போட்டியின் ஆட்ட நாயகனாக முக்கிய தருணத்தில் இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சுக்காக 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த நுவான் குலசேகர தெரிவாகினார்.

இனி Road Safety World Series T20 தொடரின் இறுதிப் போட்டி இன்று (01) இரவு இலங்கை மற்றும் இந்திய லெஜன்ட்ஸ் அணிகள் இடையே நடைபெறவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை லெஜன்ட்ஸ் – 172/9 (20) இஷான் ஜயரட்ன 31(19), சனத் ஜயசூரிய 26(19), கிரிஷ்மார் சண்டோக்கி 26/2(4), டேவேந்திர பிஷூ 17/2(2)

மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் – 158/7 (20) நார்ஷிங் டோநரைன் 63(39), நுவான் குலசேகர 26/2(4), சனத் ஜயசூரிய 26/2(3)

முடிவு – இலங்கை லெஜன்ட்ஸ் 14 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<