கிரிக்கெட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 26

2030

1995ஆம் ஆண்டுஇலங்கை அணியின் சாதனை டெஸ்ட் வெற்றி

1995ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்  மற்றும் ஒருநாள் தொடரில் பங்கு கொண்டது. டெஸ்ட் தொடரின் 1ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி பெற 2ஆவது போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டி  சியால்கோட் ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி தமது முதன் இனிங்ஸிற்காக ஆடிய இலங்கை அணி 232 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக குமார் தர்மசேன ஆட்டம் இழக்காமல் 62 ஓட்டங்களையும், அசங்க குருசிங்ஹ 45 ஓட்டங்களையும், அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹஷான் திலகரத்ன ஆகியோர் தலா 24 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் தரப்பில் பந்து வீச்சில் அகீப் ஜாவித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அமீர் சுஹைல் 48 ஓட்டங்களையும், ரமீஸ் ராஜா மற்றும் மொயீன் கான் ஆகியோர் தலா 26  ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்து வீச்சில் முத்தையா முரளிதரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்த பிரமோதய விக்ரமசிங்ஹ, குமார் தர்மசேன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து 18 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது 2ஆவது இனிங்ஸிற்காக ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. இலங்கை அணியின் 2ஆவது இனிங்ஸின் துடுப்பாட்டத்தில் அர்ஜுன ரணதுங்க 87 ஓட்டங்களையும், சந்திக்க ஹத்துருசிங்ஹ 73  ஓட்டங்களையும், ஹஷான் திலகரத்ன 50 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் முஹம்மத் அக்ரம் 3 விக்கெட்டுகளை வீழ்த்த அகீப் ஜாவித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பின்பு 357 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 212 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 144 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் மொயீன் கான் இறுதிவரை தனிமரமாக போராடி ஆட்டம் இழக்காமல் 117 ஓட்டங்களைப் பெற்றார். இவரைத் தவிர பாசித் அலி 27 ஓட்டங்களையும், ஆமீர் நசீர் 11 ஓட்டங்களையும் பெற மற்ற வீரர்கள் 10 இற்கும் குறைவான ஓட்டங்களோடு ஆட்டம் இழந்து பெரும் ஏமாற்றம் அளித்தனர். இலங்கை அணியின் பந்து வீச்சில் பிரமோதய விக்ரமசிங்ஹ மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் 4 விக்கெட்டுகளைத் தம்மிடையே பங்கு போட்டுக் கொண்டனர்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அர்ஜுன ரணதுங்க தெரிவு செய்யப்பட்டதோடு போட்டித் தொடரின் நாகயனாக இலங்கை அணியின் ஹஷான் திலகரத்ன மற்றும் பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் மொயீன் கான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த வெற்றியானது இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகளைக் கொண்ட  டெஸ்ட் தொடர் ஒன்றை வெளிநாட்டு மண்ணில் வெற்றி கொண்ட முதல் சந்தர்ப்பமாகும்.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 25

செப்டம்பர் மாதம் 26ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1943ஆம் ஆண்டுஇயன் செப்பல் (அவுஸ்திரேலியா)
  • 1947ஆம் ஆண்டுபிராங்க்ளின் டென்னிஸ் (கனடா)
  • 1972ஆம் ஆண்டுமார்க் ஹஸ்லம் (நியூசிலாந்து)
  • 1981ஆம் ஆண்டுமுதுமுதலிகே புஷ்பகுமார (இலங்கை)
  • 1986ஆம் ஆண்டுசீன் வில்லியம்ஸ் (சிம்பாப்வே)
  • 1989ஆம் ஆண்டுஜொனி பெயர்ஸ்டோவ் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்