T20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

ICC T20 World Cup 2022

708
ICC T20 World Cup 2022

அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 13ம் திகதி மெல்போர்னில் நடைபெறும் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>> சங்கக்காரவுக்குப் பிறகு பிக் பேஷ் லீக்கில் ஆடும் முதல் இலங்கையர்

உலகக்கிண்ண சம்பியன்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த தொகையானது இலங்கை ரூபாயில் சுமார் 56 கோடி 87 இலட்சத்து 51 ஆயிரம் (568,751,520) என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு சம்பியன்களுக்கு வழங்கப்படும் தொகையில் பாதித்தொகை வழங்கப்படும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இம்முறை T20 உலகக்கிண்ணத்தின் மொத்த பரிசுத்தொகையாக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 199 கோடி ருபாய்)செலவிடப்படவுள்ளதுடன், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 14 கோடி 21 இலட்சம்) வழங்கப்படவுள்ளன.

அதேநேரம் சுபர் 12 சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு கடந்த ஆண்டு போன்று தலா 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (2 கோடி 48 இலட்சம்) வழங்கப்படவுள்ளதுடன், சுபர் 12 சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை (ஒரு கோடி 42 இலட்சம்) அணிகள் பரிசாக பெறவுள்ளன.

இதேவேளை T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் நடைபெறும் போட்டிகளில் பெறும் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதுடன், முதல் சுற்றிலிருந்து வெளியேறும் அணிகளுக்கும் தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடர் ஒக்டோபர் 16ம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கவுள்ளதுடன், இலங்கை – நமீபியா அணிகள் முதல் போட்டியில் விளையாடவுள்ளன.

பரிசுத்தொகை விபரம்

  • சம்பியன் – 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்
  • இரண்டாமிடம் – 8 இலட்சம் அமெரிக்க டொலர்
  • அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் – 4 இலட்சம் அமெரிக்க டொலர்
  • சுபர் 12 சுற்றின் வெற்றிகளுக்கு – தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்
  • சுபர் 12 சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு – 70 ஆயிரம் அமெரிக்க டொலர்
  • முதல் சுற்றின் வெற்றிகளுக்கு – தலா 40 ஆயிரம் அமெரிக்க டொலர்
  • முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு – 40 ஆயிரம் அமெரிக்க டொலர்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<