23 வயதுக்கு உட்பட்ட ஆடவருக்கான இரண்டாவது ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் எட்டு அணிகளுக்குள் இடம் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்த இலங்கை அணியை, தாய்லாந்து அணி 3-1 செட் கணக்கில் வெற்றியீட்டி அக்கனவை தகர்த்தெறிந்தது.
சுற்றுப் போட்டிகளின் ஆரம்ப நாளின் போது, ஜப்பான் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 25-14, 25-17 மற்றும் 25-13 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றிருந்தது. அதேவேளை ஜப்பான் மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியில் ஜப்பான் அணி முதல் செட்டில் 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதையடுத்து இரண்டாம் செட்டில் தாய்லாந்து அணி 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது. அந்த வகையில் மீண்டும் மூன்றாவது செட்டில் ஜப்பான் 25-19 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் நான்காவது செட்டில் தாய்லாந்து 25-22 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வெற்றி பெற, வெற்றியைத் தீர்மானிக்க கூடிய ஐந்தாவதும் இறுதியுமான செட்டில் 15-8 என்ற புள்ளிகள் அடிப்படையில் தாய்லாந்து அணி தோல்வியுற்றது.
முதல் எட்டு அணிகளுக்குள் வருவதற்கு இலங்கை அணி கடுமையாக போராடியது. அந்த வகையில் தாய்லாந்து அணியுடனான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில், முதல் செட்டில் 25-23 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிறந்த ஆரம்பத்தை இலங்கை கரப்பந்தாட்ட அணி பெற்றது.
எனினும், வீழ்ச்சியிலுருந்து மீண்டெழுந்த தாய்லாந்து அணி தொடர்ச்சியாக 3 செட்களை 21-25, 19-25 மற்றும் 18-25 என்ற கணக்கில் வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தது.
கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் தாய்லாந்து அணியிடம் தோல்வியுற்ற இலங்கை கரப்பந்தாட்ட அணியால் முதல் எட்டு அணிகளுக்குள் இடம் பிடிக்கமுடியவில்லை. எனினும், ஜப்பான் அணியுடனான போட்டியில் வெளிப்படுத்தியிருந்த திறமைகளை விட தாய்லாந்து அணியுடனான போட்டியில் அதிகளாவான திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது.
அந்த வகையில், இலங்கை அணியானது அவுஸ்திரேலியா அல்லது சீனா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளுடனான போட்டிகளில் வெற்றியீட்டி 9 தொடக்கம் 11ஆம் இடங்களுக்குள் தெரிவாக எதிர்பார்த்துள்ளது.
அதேநேரம் A குழுவில் இருந்து ஈரான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் எட்டு அணிகளுக்குள் தகுதி பெற்றுள்ளன. அதேவேளை B குழுவில் இருந்து சைனிஸ் தாய்பேய் மற்றும் கசகஸ்தான் ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.