உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

465
Getty Images

இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு கத்துக்குட்டியாகவே நுழைந்தது என்பதை யாராலும்  மறுக்க முடியாது. ஆனால், கத்துக்குட்டியாக இருக்கும் போதே இலங்கை அணி உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் போட்டியொன்றில் முதல் வெற்றியினை சுவைத்துவிட்டது எனலாம். இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்தில் கிடைத்த அந்த முதல் வெற்றி எப்படி இருந்தது என்பதை பார்ப்போம்.

MCC இன் தலைவராக குமார் சங்கக்கார

கிரிக்கெட் விளையாட்டின் சட்ட திட்டங்களை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட்…

இலங்கை அணி உலகக் கிண்ணத் தொடரின் போட்டி ஒன்றில் கிடைத்த குறித்த முதல் வெற்றியினை, 1979ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடர் மூலம் பதிவு செய்து கொள்கின்றது.

1979ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் நேரடி தகுதி இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைக்கவில்லை. இதற்காக இலங்கை அணியினர் அதே ஆண்டில் 16 நாடுகளின் அணிகள் பங்குபற்றிய ஐ.சி.சி. கிண்ணத் தொடரில் சம்பியனாக மாற வேண்டிய நிலைமை காணப்பட்டிருந்தது.  இலங்கை அணி ஐ.சி.சி. கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் கனடாவினை வீழ்த்தி 1979ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் தகுதியினைப் பெற்றது.

1979ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையுடன் சேர்த்து மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் கனடா என எட்டு அணிகள் பங்குபற்றியிருந்தன. இதில் இலங்கை மற்றும் கனடா ஆகியவற்றை தவிர அனைத்தும் பலம் பொருந்திய கிரிக்கெட் அணிகளாகவே காணப்பட்டன.

இதேநேரம், 1979ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் அனைத்து போட்டிகளும் பகல் நேரங்களில் மாத்திரம் விளையாடப்பட்டிருந்ததோடு, அவை அணிக்கு 60 ஓவர்கள் கொண்ட ஆட்டங்களாகவும் அமைந்தன.

மேலும், இந்த உலகக் கிண்ணத் தொடரில் இப்போது போல் வர்ண ஆடைகள் இல்லாமல் வெள்ளை ஆடைகள் மாத்திரமே வீரர்களால் பயன்படுத்தப்பட்டிருந்ததோடு, சிவப்பு பந்தே போட்டிகளுக்காக உபயோகம் செய்யப்பட்டிருந்தது.

உலகக் கிண்ணத்தில் சுற்றாடல் காப்பிற்கான ஜேர்சியை பயன்படுத்தவுள்ள இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் பயன்படுத்தவுள்ள…

இலங்கை அணி, 1975ஆம் ஆண்டில் முதல் தடவையாக இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் அழைப்பு அணியாக  பங்குபற்றியிருந்தது. எனினும், இலங்கை அணி அந்த உலகக் கிண்ணத் தொடரில் எந்தவொரு வெற்றியினையும் பதிவு செய்திருக்கவில்லை.

இதேமாதிரியான நிலைமை ஒன்றே 1979ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கத்துக்குட்டிகளான இலங்கை அணிக்கு பெருமைப்படும்படியான ஒரு அடைவு கிடைத்தது.

1979ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் குழு  B இல் காணப்பட்ட இலங்கை அணி, தமது முதல் போட்டியில் பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் மோசமான தோல்வி ஒன்றினை தழுவியது.

பின்னர் தமது இரண்டாம் போட்டியில் இலங்கை அணி,  மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ள முனைந்த போதிலும் குறித்த போட்டி தவிர்க்க முடியாத காரணங்களினால் நடைபெறவில்லை.

1996ம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதியில் நடந்தது என்ன?

இலங்கை கிரிக்கெட் அணியையும், இலங்கையையும் உச்சத்திற்கு கொண்டு…

மேற்கிந்திய தீவுகளை அடுத்து 1979ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு இந்தியாவுடன் மோதும் போட்டி மாத்திரமே எஞ்சியிருந்தது. இது அந்த உலகக் கிண்ணத் தொடரில் இரு அணிகளுக்கும் கடைசி குழு நிலைப் போட்டியாகவும் இருந்தது.

இந்திய அணி 1979ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை தழுவிய காரணத்தினால் பலம் குறைந்த இலங்கை அணியுடன் ஆறுதல் வெற்றியொன்றினை பெற்று தொடரை நிறைவு செய்ய எதிர்பார்த்திருந்தது.  

எனினும், இந்திய அணியினர் இலங்கை அணியின் திறமையினை தவறாக எடை போட்டுவிட்டனர். பின்னர் இரண்டு அணிகளும் மோதிய போட்டி மென்சஸ்டர் நகரில் ஆரம்பமாகியது.

1979ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் ஒன்பதாவது போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவரும் முன்னாள் போட்டி மத்தியஸ்தருமான ஸ்ரீனிவாஸ் வெங்கடராகவன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பந்துல வர்ணபுர தலைமையிலான இலங்கை அணிக்கு வழங்கினார்.

முதலில் துடுப்பாடத் தொடங்கிய இலங்கைத் தரப்பிற்கு அதன் அணித் தலைவரான பந்துல வர்ணபுர  ஆரம்ப வீரராக வந்து 18 ஓட்டங்களை மட்டுமே பெற்றுத்தந்தார். இதனால், இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே ஏமாற்றம் காணப்பட்டது.

எனினும், வர்ணபுரவினை அடுத்து ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சுனில் வெத்திமுனி புதிய வீரராக களம் வந்த றோய் டயசுடன் கைகோர்த்தார். வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் கைதேர்ந்த இருவரும் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 96 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த இரண்டு வீரர்களும் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுகாக பகிர்ந்த ஓட்டங்கள் அப்போதைய காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சிறந்த இணைப்பாட்டங்களில் ஒன்றாகவும் இருந்தது.

பின்னர் சுனில் வெத்திமுனி இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்தார். மொத்தமாக எட்டு பெளண்டரிகளை விளாசிய வெத்திமுனி அரைச்சதம் ஒன்றுடன் 67 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வெத்திமுனி இப்போட்டியில் பெற்ற ஓட்டங்கள் ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாகவும் காணப்பட்டிருந்தது.

சிறிது நேரத்தில் றோய் டயஸின் விக்கெட்டும் பறிபோனது. றோய் டயஸ் 2 பெளண்டரிகளுடன் அரைச்சதம் பெற்று 50 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம், இந்த 50 ஓட்டங்கள் றோய் டயஸ் சர்வதேச போட்டிகளில் பெற்ற கன்னி அரைச்சதமாகவும் அமைந்தது.

றோய் டயஸினை அடுத்து துலீப் மெண்டிஸ் இலங்கை அணியினை பலப்படுத்தினார். இந்தியப் பந்துவீச்சாளர்களை அதிரடியான முறையில் எதிர்கொண்ட மெண்டிஸ் 57 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 64 ஓட்டங்களை குவித்தார்.

தொடர்ந்து துலீப் மெண்டிஸின் அதிரடியோடு இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க

ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம். இதற்கு முன்னர் கிரிக்கெட் இரசிகர்களால்…

அதேநேரம், இலங்கை அணியில் பறிபோன ஐந்து விக்கெட்டுகளில் மூன்றினை இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளரான மோஹின்தர் அமர்நாத் கைப்பற்றியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான சவால் குறைந்த 239 ஓட்டங்களை 60 ஓவர்களில் அடைய பதிலுக்கு இந்திய அணி துடுப்பாடத் தொடங்கியது.

இந்திய அணி நல்ல ஆரம்பத்தை காட்டிய போதிலும் தொடர்ந்து இலங்கையின் வேகப் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர். இதனால், இந்திய அணியின் ஆரம்ப வீரராக வந்த சுனில் கவாஸ்கரின் விக்கெட் 26 ஓட்டங்களுடன் பந்துல குணவர்த்னவின் பந்துவீச்சில் பறிபோனது.

கவாஸ்கரை அடுத்து இந்திய அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அன்சுமான் கேக்வாட்டும் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். வேகப் பந்துவீச்சாளரான ஸ்டான்லி டி சில்வாவினால் வீழ்த்தப்பட்ட கேக்வாட் 33 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

பின்னர் திலிப் வெங்கஸ்கர்கார் இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை தந்தார். எனினும், அவரின் விக்கெட்டும் பின்னர் சுழல் வீரரான சோமச்சந்திர டி சில்வாவினால் கைப்பற்றப்பட்டது. திலிப் வெங்கஸ்கர்கார் ஆட்டமிழக்கும் போது 36 ஓட்டங்களை பெற்றிருந்தார். இப்படியாக இலங்கை அணி தமது கூட்டு முயற்சியினால் இந்தியாவிற்கு நம்பிக்கை தரக்கூடிய வீரர்கள் அனைவரையும் ஓய்வறை அனுப்பியது.

திலிப் வெங்கஸ்கர்காரை அடுத்து இந்திய அணிக்கு இலங்கை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிப்பது சிரமமாக மாறியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த  அவர்கள் 54.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே குவித்து போட்டியில் தோல்வியினை தழுவினர்.

இந்திய அணி இப்போட்டியில் மத்திய வரிசையில் கபில் தேவ் போன்ற ஆளுமைமிக்க வீரர்களை கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கு இலங்கை அணியின் வெற்றி இலக்கினை எட்டுவது இயலாத காரியமாகவே போய் விட்டது. அதோடு, கத்துக்குட்டிகளை இலகுவாக வீழ்த்திவிடலாம் என்கிற அவர்களது ஆசையும் நிராசையானது.  

>>உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் உதவி

இலங்கை அணியின் வெற்றியினை டொனி ஒப்பத்தா,  சோமசந்திர டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றி உறுதி செய்ததோடு ஸ்டேன்லி டி சில்வாவும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணிக்கு உதவி செய்திருந்தார்.

கத்துக்குட்டிகளாக இருந்தபோதிலும் இலங்கை அணியினர் இப்போட்டியில் காட்டிய அதீத ஒருங்கிணைப்பும், வெற்றி ஒன்றை பெறவேண்டும் என்கிற அவாவுமே அவர்களை உண்மையான வெற்றியாளர்களாக மாற்றியது. அதேமாதிரியான அவாவும், ஒருங்கிணைப்பும் காணப்படும் எனில் இலங்கை அணி இந்த ஆண்டு இடம்பெறும் உலகக் கிண்ணத் தொடரிலும் சாதிக்கும்.

இந்திய அணிக்கு எதிராக பெற்றுக் கொண்ட வெற்றியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் முதல் வெற்றியினை பதிவு செய்த இலங்கை அணி, 17 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ணம் ஒன்றையும் 1996ஆம் ஆண்டில் வெற்றி பெறுகின்றது. அதோடு இந்த உலகக் கிண்ண வெற்றிக்கு பின்னர் கத்துக்குட்டி என்ற பெயரும் இலங்கை அணியிடம் இருந்து மறைந்தது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<