சர்ரே அணியை பந்துவீச்சில் மிரட்டிய துனித் வெல்லாலகே

Sri Lanka Emerging Team Tour of England 2022

129

இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி மற்றும் சர்ரே கிரிக்கெட் கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (22) நிறைவுக்கு வந்தது.

இதில் சர்ரே கிரிக்கெட் அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய ரையன் பட்டேல் மற்றும் பென் கெடஸ் சதமடித்து அசத்த, இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இங்கிலாந்தின் கில்பர்ட்டில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வருகின்ற சர்ரே அணி, இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவடையும் போது எந்தவொரு விக்கெட் இழப்பின்றி 196 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் காணப்பட்டது.

சர்ரே அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர்களான ரையன் பட்டேல் 109 ஓட்டங்களையும், பென் கெடஸ் 75 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று களத்தில் நின்றனர்.

இதன்படி, போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் (22) சர்ரே அணி தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இதில் சர்ரே அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஆரம்ப வீரர்களான ரையன் பட்டேல் 126 ஓட்டங்களையும், பென் கெடஸ் 104 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த கஸ் எட்கின்ஸன் 91 ஓட்டங்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட, நீகோ ரீபர் 68 ஓட்டங்களையும், ஜேமீ ஸ்மித் 45 ஓட்டங்களையும் எடுத்து சர்ரே அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

இறுதியில் சர்ரே அணி, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்சுக்காக 154.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 482 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதன்படி, சர்ரே அணியானது, இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையைவிட 110 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணியின் பந்துவீச்சு சார்பில் இளம் வீரர் துனித் வெல்லாலகே 127 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், நுவனிந்து பெர்னாண்டே 78 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இலங்கை வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸிற்காக நிபுன் தனன்ஜயவின் சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுக்களை இழந்து 372 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று (23) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி – 372/9d (102) – நிபுன் தனன்ஞய 150, அவிஷ்க தரிந்து 48, துனித் வெல்லாலகே 46, டொம் லோவ்ஸ் 3/34, அமர் வெர்டி 3/67

சர்ரே அணி – 482/7 (154.4) – ரையன் பட்டேல் 126, பென் கெடஸ் 104, கஸ் எட்கின்ஸன் 91, நீகோ ரீபர் 68, ஜேமீ ஸ்மித் 45, துனித் வெல்லாலகே 4/127, நுவனிந்து பெர்னாண்டோ 2/78

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<