யுபுனுக்கு ஒரு இலட்சம் டொலர்கள் நிதியுதவி

94

தெற்காசியாவின் அதிவேக வீரரும், இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரருமான யுபுன் அபேகோனுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், விளையாட்டு வாழ்க்கையில் எதிர்கால முதலீடாகவும், குறிப்பாக மெய்வல்லுனர் போட்டிகளில் தனது திறமைகளை வளர்த்து அதன் மூலம் இலங்கைக்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வதே இதன் நோக்கமாகும்.

இதனிடையே, விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் யுபுன் அபேகோன் ஆகியோருக்கு இடையில் இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (22) விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

யுபுன் அபேகோனுக்கு அனுசரணை வழங்கும் இலங்கை கிரிக்கெட்

இந்நிகழ்வில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, யுபுன் அபேகோன் மற்றும் அவரது முகாமையாளர் சன்ஜய கன்லத் மற்றும் அவரது சட்டத்தரணி ருவினி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கடந்த ஜுலை மாதம் யுபுன் அபேகோனுக்கு ஆண்டுக்கு தலா 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியை ஊக்கத்தொகையாக வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை அவருக்கு ஊக்கத்தொகையாக வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<